என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி..அன்புடன் ஆனந்த் ...

Monday, April 8, 2013

அஞ்சலி உயிருக்கு ஆபத்து - கதறி அழுதார்

பிரபல நடிகை அஞ்சலி, "தன் உயிருக்கு சித்தி மற்றும் இயக்குனர் ஒருவரால் ஆபத்து' என, நேற்று திடீரென கூறியதால், பரபரப்பு ஏற்பட்டது. "கற்றது தமிழ், அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், சேட்டை, வத்திக்குச்சி' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர், நடிகை அஞ்சலி. தற்போது, இயக்குனர் களஞ்சியம் இயக்கத்தில், "ஊர் சுற்றி புராணம்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.



சினிமா, "ஷுட்டிங்'கிற்கு அஞ்சலி வரும் போது, கூட ஒரு பெண்ணும் துணைக்கு வருவார். அவரை அஞ்சலி தன் அம்மா என்று தான், சினிமா வட்டாரத்தில் தெரிவித்து வந்தார். ஆனால், "அவர் அம்மா இல்லை; சித்தி. சித்தியும், சினிமா இயக்குனர் களஞ்சியமும் என்னை கொடுமைப்படுத்துகின்றனர்' என, நேற்று காலை, பத்திரிகை நிருபர்களிடம், அலைபேசி மூலம், நடிகை அஞ்சலி பேசி அழுததால், கோலிவுட் பரபரப்பானது.



தற்போது, நடிகை அஞ்சலி, ஆந்திராவில், ஐதராபாத்தில் இருக்கிறார். அலைபேசியில் தொடர்பு கொண்ட போது, நடிகை அஞ்சலி கூறியதாவது: தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில், 22 படங்களில் நடித்திருக்கிறேன். மற்ற மொழிகளை விட, தமிழ்ப் படங்களில் நடிக்க எனக்கு பிடித்திருந்தது. ஆந்திராவிலிருந்து துணைக்கு, சித்தி பாரதியை அழைத்து வந்தேன். சித்தியை, என் அம்மா என்று தான் எல்லாரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அவர் என் அம்மா இல்லை; சித்தி. எனக்கு நல்லது செய்வார் என நினைத்து, அவரை, என் அம்மாவாகவே பாவித்து வந்தேன். வர வர சித்தியின் போக்கு சரியில்லை. நான் படத்தில் நடித்து சம்பாதித்ததை எல்லாம், அவரே எடுத்துக் கொண்டார். என் வீட்டாரிடம் கூட பேச, என்னை அனுமதிப்பதில்லை. என் குடும்பத்தாருக்கு என்னால் எதுவும் செய்ய முடியவில்லை.



தமிழில், நல்ல நடிகையாக பேசப்படுகிறேன். நிஜ வாழ்க்கையில், நிறைய, வெளியே சொல்ல முடியாத துயரங்களை சந்தித்திருக்கிறேன். தற்போது, திரைப்பட இயக்குனர் களஞ்சியமும், என் சித்தியும் சேர்ந்து கொண்டு, எனக்கு துரோகம் செய்கின்றனர். பணம் காய்க்கும் மரமாக என்னை நினைக்கின்றனர். சித்தியின் கொடுமையை, இனியும் என்னால், பொறுத்துக் கொள்ள முடியாது.

நான் மேஜரான பெண்; என் இஷ்டத்திற்கு, என் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விரும்புகிறேன். இனி, என் சித்திக்கும், எனக்கும் எந்த உறவும் கிடையாது. என் உடம்பில் ஒரு கீறல் விழுந்தாலும், உயிருக்கு ஏதும் ஆபத்து ஏற்பட்டாலும், இதற்கு என் சித்தி பாரதியும், இயக்குனர் களஞ்சியமும் தான் பொறுப்பு. இவ்வாறு, அஞ்சலி தெரிவித்துள்ளார்.





அஞ்சலி குற்றச்சாட்டு குறித்து, இயக்குனர் களஞ்சியம் கூறியதாவது: எனக்கும், அஞ்சலிக்கும் எந்த தொடர்பும் கிடையாது. "கருங்காலி' படத்தில் அஞ்சலி நடித்தார். அதற்கு பேசப்பட்டபடி சம்பளம் கொடுத்து விட்டேன். ஒரு நடிகை என்ற முறையில் அவரிடம் பேசியிருக்கிறேன். மற்றபடி, அவரது நடவடிக்கைகள் எதிலும், நான் தலையிட்டதில்லை. தற்போது, "ஊர் சுற்றி புராணம்' என்ற படத்தை எடுத்து வருகிறேன். நான் நாயகனாக நடிக்கிறேன். அஞ்சலி நாயகி.

இதுவரை, 15 நாட்கள் படப்பிடிப்பு நடந்துள்ளது. அடுத்த கட்ட படப்பிடிப்பிற்கு, வரும், 24ம் தேதியிலிருந்து, "கால்ஷீட்' கொடுத்திருக்கிறார். பேசப்பட்டபடி சம்பளமும் கொடுத்திருக்கிறேன். ஆந்திராவில், என் பட "ஷுட்டிங்' முடித்து விட்டு சந்தோஷமாகத் தான் ஐதராபாத் சென்றார். நான் அடுத்த கட்ட படப்பிடிப்பிறகு இடம் பார்த்து விட்டு, நேற்று தான் ஊர் திரும்பினேன்.

அஞ்சலி என் மீது குற்றச்சாட்டு கூறியது குறித்து, பத்திரிகை நிருபர்கள் மூலம் தான் எனக்கு தெரிய வந்தது. எனக்கும், அவருக்கும் தனிப்பட்ட முறையில் எந்த தொடர்பும் கிடையாது. அவரது சொந்த பிரச்னையில் என்னை ஏன் இழுக்கிறார் என, தெரியவில்லை. அஞ்சலி, ஐதராபாத் சென்ற போது என்ன நடந்தது என தெரியவில்லை. என்னை குறை சொல்லியதற்கு அவர் மறுப்பு தெரிவிக்க வேண்டும். இல்லையேல், சட்டப்பூர்வமாக என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அதை நான் மேற்கொள்வேன். இவ்வாறு, களஞ்சியம் கூறினார்.



இப்பிரச்னை குறித்து கேட்பதற்கு, ஆந்திராவிலிருக்கும், அஞ்சலியின் சித்தி பாரதியை தொடர்பு கொண்ட போது, அவரது அலைபேசிக்கு இணைப்பு கிடைக்கவில்லை.







No comments:

Post a Comment