நடிகை அஞ்சலி தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஐதராபாத்தில் இருந்து நேற்று முன்தினம் பேட்டி அளித்தார். மேலும் இதுநாள் வரை நான் அம்மா என்று கூறிவந்த பாரதி தேவி, என் அம்மா அல்ல. சித்தி. அவர் என் சொத்தை எல்லாம் அபகரித்துக் கொண்டார் என்றும் பரபரப்பான தகவல்களை வெளியிட்டார்.
இதுகுறித்து அவருடைய சித்தி பாரதி தேவி, ‘’அஞ்சலிக்கு நான் சித்தி என்பது உண்மைதான். அவள், என் அக்கா பார்வதி தேவியின் மகள். அக்காள் பார்வதி தேவி, ஆந்திராவில் ஜெகன்பேட்டை என்ற இடத்தில் வசிக்கிறார்.
ஒரு ஆண் குழந்தையுடனும், ஒரு பெண் குழந்தை (அஞ்சலி)யுடனும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அக்காவை, அவருடைய கணவர் விட்டு விட்டு ஓடிவிட்டார். அக்காள் பார்வதி தேவி இரண்டாம்தாரமாக வேறு ஒருவருக்கு வாழ்க்கைப்பட்டு, அவர் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் பெற்றார்.
இந்த நிலையில், பிளஸ்-2 படித்துக்கொண்டிருந்த அஞ்சலி, ஸ்ரீராம் என்ற பையனுடன் காதல் வசப்பட்டு வீட்டை விட்டு ஓடிவிட்டாள். ஒரு மாதம் கழித்து அவளை கண்டுபிடித்தார்கள்.
சென்னையில் வசித்து வந்த நான் ஜெகன்பேட்டைக்குப் போய் அஞ்சலியை கட்டிய பாவாடை-தாவணியுடன் என் வீட்டுக்கு அழைத்து வந்தேன். எனக்கு பெண் குழந்தை இல்லை என்பதால், அஞ்சலியை என் மகள் போல் வளர்த்தேன். நான் கஷ்டப்பட்டு அவளை நடிகை ஆக்கினேன். டைரக்டர் களஞ்சியம்தான் அவளுக்கு 6 மாதங்கள் நடிப்பு பயிற்சி அளித்தார். எப்படி நடக்க வேண்டும் என்று கற்றுக் கொடுத்தார்.
அஞ்சலி முதன்முதலாக ஒரு தெலுங்கு படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்தாள். அந்த படம் தோல்வி அடைந்தது. அதைத்தொடர்ந்து இன்னொரு தெலுங்கு படத்திலும் சம்பளமே இல்லாமல் நடித்தாள். அந்த படமும் தோல்வி அடைந்தது.
அவள் முதன்முதலாக சம்பளம் வாங்கியது, ஒரு கன்னட படத்தில்தான். அந்த படத்துக்காக அவளுக்கு ரூ.50 ஆயிரம் சம்பளமாக கொடுத்தார்கள். அதன்பிறகு ஒரு மலையாள படத்தில் நடித்து, ரூ.1 லட்சம் சம்பளம் வாங்கினாள்.
தமிழில் அறிமுகமான ‘கற்றது தமிழ்‘ படத்துக்கு சம்பளம் கிடையாது. ‘ஆயுதம் செய்வோம்‘ என்ற படத்துக்காக ஒரு லட்சம் சம்பளம் கொடுத்தார்கள். ‘எங்கேயும் எப்போதும்’ படத்துக்கு ரூ.5 லட்சம் கொடுத்தார்கள். ‘கருங்காலி’ படத்தில், ரூ.8 லட்சம் சம்பளம். ‘சேட்டை’ படத்துக்குத்தான் பெரிய சம்பளம் வாங்கினாள். அந்த படத்துக்காக ரூ.20 லட்சம் கொடுத்தார்கள்.
அவள் சம்பாதித்த பணத்தை கொண்டு அவள் பெயருக்கு சென்னை வளசரவாக்கத்தில் ஒரு வீடு வாங்கி கொடுத்தேன். இதற்கிடையில், அஞ்சலி எத்தனை முறை வீட்டை விட்டு ஓடிப்போனாள் என்பது எனக்குத்தான் தெரியும்.
ஒருமுறை என்னை வீட்டில் ஒரு அறைக்குள் தள்ளி பூட்டிவிட்டு, பரத்ஷா என்ற கன்னட டைரக்டருடன் அஞ்சலி ஓடிவிட்டாள். அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வெளியே வந்து, கோயம்பேடு பஸ்நிலையத்துக்கு சென்று, பெங்களூர் பஸ்சில் இருந்த அஞ்சலியை வீட்டுக்கு அழைத்து வந்தேன். இத்தனை கஷ்டப்பட்டு ஒரு நட்சத்திர நடிகையாக அவளை கொண்டு வந்தேன். அதற்கு பரிசாக, என்னை சித்தி என்று சொல்லி விட்டாள்’’என்று கூறினார்.
No comments:
Post a Comment