எங்க ஏரியாவுல ஒரு ஆடு, லெக் பீஸ் சாப்பிடுதுங்கோ!,''தகவல் வந்தபோது, கொஞ்சம் சந்தேகமாகத்தான் இருந்தது; அதையும் பார்த்துவிடுவோமே என்று விலாசம் விசாரித்து நாம் சென்ற இடம், பேரூரை அடுத்த ஆறுமுக கவுண்டனூரிலுள்ள அழகுராஜ் என்ற விவசாயினுடைய வீடு. அவர் வளர்க்கும் 10 ஆடுகளில் ஒன்றுதான், சிக்கன், முட்டை, மீன் என்று எல்லைச்சாமியைப் போல எல்லாவற்றையும் வெளுத்து வாங்குகிறது.
ஆட்டைப் பார்க்க நாம் வருவது தெரிந்து, முட்டை அவியல், பொரித்த மீன், சிக்கன் லெக்பீஸ் (நண்டு கிடைக்கலையோ!) என சகல அசைவ வகைகளையும் சமைத்து வைத்திருந்தனர். நம் கண் முன்னே, அந்த ஆட்டுக்குட்டிக்கு அசைவ விருந்து படைக்கப்பட்டது. அடுத்த ஐந்தாவது நிமிடம், தட்டு காலி."என் ராசாவின் மனசிலே' ராஜ்கிரண் ஸ்டைலில், தாடையை முன்னும் பின்னுமாக இழுத்து அசைத்து, தொடை பீஸ்சை அந்த ஆடு கடித்து துவம்சம் செய்ததைப் பார்த்தபோது, நம் தொடையும் கொஞ்சம் ஆடிப்போனது. அதிசய ஆட்டின் "ஓணர்' அழகுராஜிடம் பேசினோம்.
""இந்த ஆட்டோட பேரு தாரா. மூணு வயசான இந்த ஆடு, இதுவரைக்கும் ஆறு குட்டி போட்டிருக்கு. ஞாயித்துக்கிழமையில, வீட்டுல நாங்க சாப்பிட்டது போக மிச்சமாகுற சிக்கன், மட்டன், எலும்பையெல்லாம் நாய்க்குப் போடுவோம். ஒரு நாள், நாங்க போட்ட சிக்கனை இந்த ஆடும் சாப்பிட்டதைப் பார்த்தோம். அப்போதுல இருந்து, சிக்கன், மீன், முட்டை எதைப் போட்டாலும் சாப்பிடுது. இதுவரைக்கும் எந்த பாதிப்பும் வரலை. பால், புழுக்கையில ஒரு வித்தியாசமும் தெரியலை. அசைவம் சாப்பிட்டாலும், இலை தழையைச் சாப்பிடதையும் விடலை,'' என்றார் அவர்.
இயற்கைக்கு முரணான இந்த ஆட்டைப் பற்றி, கோவை கால்நடை பயிற்சி மைய இணை பேராசிரியர் சிவக்குமாரிடம் கேட்டபோது, ""பொதுவாக ஆடுகளுக்கு நாம் தரக்கூடிய உணவில், சரிவிகித சத்துக்கள் கிடைக்கவில்லை என்றால், வழக்கத்தில் இல்லாத தீவனங்களை சாப்பிடுவது வழக்கம். இந்த ஆடு இலை, புல் போன்றவற்றுடன் அசைவ உணவுகள் சாப்பிடுவதை பழக்கப்படுத்தி கொண்டுள்ளது. இறைச்சியை நன்கு சமைத்து வேக வைத்து விடுவதால், ஜீரணப்பிரச்சனைகள், நஞ்சு போன்ற பாதிப்புகள் ஏற்படுவதில்லை. இதனால் ஆட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனாலும், இயற்கையில் இது ஓர் அதிசயம்தான்,'' என்றார்.
ஆட்டுக்கறியை நாம சாப்பிட்டா அசைவம். ஒரு ஆடே, கறி சாப்பிட்டா அது சைவமா, அசைவமா?
No comments:
Post a Comment