ரஜினி வரலாறு: பகுதி-1ரஜினி வரலாறு: பகுதி-2
சின்ன வயதில் முரட்டு சுபாவம்
உள்ளவராக இருந்தார். நண்பர்களுடன் சேர்ந்து சாராயம் குடிப்பது, பெண்களை விரட்டுவது என அவர் நடத்தியது நவீன கிருஷ்ண லீலை என்று அவரே பின்னாளில் கூறியுள்ளார்.
மகன், கல்லூரியில் படித்து பட்டம் பெற்று, போலீசில் பெரிய அதிகாரியாக வேண்டும் என்பது ரஜினியின் தந்தை ஆசை. ஆனால், ரஜினிக்கோ படிப்பில் நாட்டமில்லை. நண்பர்களுடன் சேர்ந்து ஊர் சுற்றிக் கொண்டிருந்தார்.
வாலிப வயதில் அடியெடுத்து வைக்கும்போது, பருவத்தின் உந்துதலாலும், நண்பர்களின் பழக்கவழக்கங்களினாலும் தவறு செய்வோர் பலர்.
மகாத்மா காந்தி கூட தமது சுய சரிதையில் இதுபற்றி எழுதியிருக்கிறார். “மாமிசம் சாப்பிட்டால் பலசாலி ஆகலாம் என்று என் நண்பர் சொன்னதைக் கேட்டு, நான் ரகசியமாக மாமிசம் சாப்பிட்டேன். பின்னர் அது தவறு என்பதை உணர்ந்து, என்னை மன்னித்து விடும்படி தந்தைக்குக் கடிதம் எழுதினேன். அந்தக் கடிதத்தைப் படித்துவிட்டு, என் தந்தை கண்ணீர் வடித்தார். அந்தக் கண்ணீரில் என் பாவங்கள் கரைந்துவிட்டன” என்று மகாத்மா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
ரஜினியின் இளமைப் பருவத்திலும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடந்தன. அரும்பிக்கொண்டிருந்த மீசை நன்றாக இருக்க வேண்டும் என்று கருதி, மையினால் மீசை வரைந்து கொள்வார். சிகரெட் பிடிப்பார்.
இதையெல்லாம், ஒரு சூப்பர் ஸ்டாரான பிறகு தனது பல பேட்டிகளிலும், கட்டுரைகளிலும் ஒளிவு மறைவு இல்லாமல் ரஜினி குறிப்பிட்டிருக்கிறார்.
ஒரு கட்டுரையில் அவர் இப்படிச் சொல்லியிருக்கிறார்:
“பிஞ்சிலே பழுத்தது என்பார்களே, அது மாதிரி நான் வளர்ந்தேன். சின்ன வயதிலேயே ‘செக்ஸ்’ என்றால் என்ன வென்று எனக்குத் தெரியும். என்னைவிட வயதில் மூத்தவர்கள்தான் எனக்கு பிரண்ட்ஸ். அவர்கள் குடித்து விட்டு தாசிகள் வீட்டுக்கு போவார்கள். நின்று பார்த்திருக்கிறேன்.
அந்த சின்ன வயதிலேயே அதற்காக தாங்க முடியாத உதையும் வாங்கியிருக்கிறேன்.
16 வயதில் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் சேர்ந்தபோது, இந்த அரகன்ஸ், முரட்டுத்தனம் எல்லாம் கொஞ்சம் மட்டுப்பட்டன. பிரேயர், பிராணயாமம் எல்லாம் செய்தபோது, என் சுபாவங்கள் சற்று குறைந்தன.
ஆனால், எஸ்.எஸ்.எல்.சி. முடித்தபின் மீண்டும் மூத்த வயது நண்பர்கள் கிடைத்தார்கள். முரட்டுத்தனம் மறுபடியும் வந்துவிட்டது. முரட்டுத்தனம் என்றால் சண்டை மாத்திரம் அல்ல. ‘நீ ஒரு கிளாஸ் சாராயம் குடிப்பியா? நான் 6 கிளாஸ் சாராயம் குடிப்பேன்’ என்று சவால் விடுகிற முரட்டுத்தனம். மற்றவர்கள் பார்வையை நம் மீது திருப்பவேண்டும் என்ற வெறி…”
ஒருமுறை, ஒரு பெண்ணை விரட்டிச் சென்றபோது, அவள் போலீசாரிடம் புகார் செய்ய, போலீசார் ரஜினியையும், அவருடைய நண்பர்களையும் பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டார்கள்.
ரஜினியின் தந்தை தலைமை போலீஸ்காரர் என்பதையும், சிறந்த சேவை செய்ததற்காக அரசாங்க விருது பெற்றவர் என்பதையும் அறிந்து கொண்ட போலீசார், ரஜினியை விடுவித்து, வீட்டில் கொண்டுபோய் விட்டனர்.
நடந்ததை அறிந்த ரஜினியின் அண்ணன் சத்தியநாராயணாவுக்கு கோபம் பொங்கியது. முரட்டுத் தம்பியை பின்னியெடுத்துவிட்டார். ஆனால் வெளியில் அத்தனை முரட்டுப் பிள்ளையாக இருந்தாலும், அண்ணனை எதிர்த்துப் பேசவோ, அடிப்பதை எதிர்க்கவோ முயலவில்லை ரஜினி. அமைதியாக தனது தவறுகளுக்கு தண்டனையை வாங்கிக் கொண்டார். இதை சத்தியநாராயண ராவே பல முறை கூறியுள்ளார்.
“தம்பி வெளியில் எவ்வளவு முரடனாக இருந்தாலும், வீட்டுக்கு வந்துவிட்டால் என்னிடம் அத்தனை மரியாதை, பயத்துடன்தான் நடந்து கொள்வார்…” என்கிறார் சத்யநாராயண ராவ்.
ரஜினிகாந்த், சிறு வயதிலேயே பயம் இல்லாதவராக – துணிச்சல் மிக்கவராக இருந்தார்.
அவர் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது, பள்ளிக்கூடத்துக்கு அருகில் உள்ள காட்டில் பூதச்சாமியார் என்று ஒரு சாமியார் இருப்பதாக மாணவர்கள் பேசிக்கொள்வார்கள். “பூதமாவது! சாமியாராவது! போங்கடா…” என்று ரஜினி கேலி செய்வார்.
“அப்படியானால், நீ காட்டுக்கு தன்னந்தனியாகச் சென்று அந்த சாமியாரைப் பார்த்துவிட்டு வா பார்க்கலாம்!” என்று மற்ற மாணவர்கள் சவால் விட்டனர்.
சவாலை ஏற்ற ரஜினி, தன்னந்தனியாக காட்டுக்குள் நுழைந்தார். கால் போன போக்கில் வெகு தூரம் சென்றுவிட்டார். சாமியாரைக் காணோம்.
நடு காடு. இருள் சூழ்ந்து கொண்டு வந்தது. ஆள் அரவமே இல்லை. ரஜினிக்கு லேசாக பயம் வந்தது.
அந்தச் சமயத்தில், “வா, மகனே வா!” என்று ஒரு குரல் கேட்டது. ரஜினி திரும்பிப் பார்த்தார். அங்கே ஒரு சாமியார் நின்று கொண்டிருந்தார். வயது சுமார் 60 அல்லது 70 இருக்கும். தலைமுடி, சடை சடையாகத் தொங்கியது.
ரஜினி அவர் அருகில் சென்றார். அவர் ஏதோ மந்திரம் சொல்லி, அதை திருப்பிச் சொல்லும்படி ரஜினியிடம் கூறினார். அதன்படி ரஜினி திருப்பிச் சொன்னார்.
“இப்போது நீ திரும்பிப் போ! நாளைக்கு வா!” என்று சொன்னார், சாமியார்.
ரஜினி காட்டுக்குள் போய் வெகு நேரமாகத் திரும்பி வராததால், அவருடைய நண்பர்கள் பயந்து போய்விட்டார்கள்.
அப்போது ரஜினிகாந்த், “பூதச்சாமியாரை பார்த்துவிட்டேன்” என்று கூறிக்கொண்டே ஓடிவந்தார்.
“நிஜமாகவா! சாமியாரை பார்த்தாயா!” என்று நண்பர்கள் வியப்புடன் கேட்டார்கள்.
நடந்த விவரங்களை எல்லாம் அவர்களிடம் ரஜினி கூறினார். தைரியமாக நடுக்காட்டுக்கு போய் சாமியாரைப் பார்த்துவிட்டுத் திரும்பிய ரஜினியை நண்பர்கள் வியப்புடனும் பயத்துடனும் பார்த்தார்கள். பாராட்டினார்கள்.
மறுநாள் பூதச்சாமியாரை ரஜினி போய்ப்பார்த்தார். தொடர்ந்து சில நாட்கள் சென்று வந்தார். ரஜினிக்கு யோகாவையும், சில மந்திரங்களையும் அந்த சாமியார்தான் கற்றுக்கொடுத்தார்.
பிறகு, “எதிர்காலத்தில் நீ பெரிய ஆளாக வருவாய்” என்று ஆசீர்வதித்து அனுப்பி வைத்தார்.
-தொடரும்