ரஷ்யா உதவியுடன் கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் அணுமின் நிலையத்தின் முதல் யூனிட், இன்னும் ஒரு சில வாரங்களில் செயல்படத் துவங்கும். இரண்டாவது யூனிட், அடுத்த ஆறு மாதங்களில் செயல்படத் துவங்கும்,'' என, பிரதமர் மன்மோகன் சிங் உறுதி அளித்துள்ளார்.
தமிழகம் கூடங்குளத்தில் ரஷ்யா உதவியுடன், அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு, முதல் இரண்டு யூனிட்களின் பணிகள் முடிந்து, மின் உற்பத்தி துவங்கவிருந்த நிலையில், கூடங்குளம் பகுதியில் வசிக்கும் மக்கள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் இறங்கினர். "ஜப்பானில் சுனாமி ஏற்பட்ட போது, புக்குஷிமா அணு மின் நிலையம் சேதம் அடைந்தது. இதனால், அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. அதேபோன்ற ஒரு பாதிப்பு, எங்களுக்கும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அணு மின் நிலையத்தால், தண்ணீர் மற்றும் சுற்றுச்சூழல் மாசுபடுவதற்கு வாய்ப்பு உள்ளது' என, போராட்ட குழுவினர் தெரிவித்தனர். இதனால், அணு மின் நிலையத்தில் நடந்து வந்த பணிகள் ஓரளவு நிறுத்தி வைக்கப்பட்டன. அதேசமயம் இந்த அணுமின் நிலையம் அதிக பாதுகாப்புடன் அமைந்தது என்ற தகவலும், இத்துறை வல்லுனர்களால் தரப்பட்டது.
இந்நிலையில், மூன்று நாள் நல்லெண்ண நட்புப் பயணமாக, பிரதமர் மன்மோகன் சிங் ரஷ்யா சென்றுள்ளார். நேற்று அவர், ரஷ்ய அதிபர் மெட்வதேவை சந்தித்துப் பேசினார். இதன் பின், இருவரும் கூட்டாக சேர்ந்து, பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது மன்மோகன் சிங் கூறியதாவது: அடுத்த சில வாரங்களில் கூடங்குளம் அணுமின் நிலையத்தின் முதல் யூனிட், அடுத்த சில வாரங்களில் செயல்படத் துவங்கும். இரண்டாவது யூனிட், அடுத்த ஆறு மாதங்களில் செயல்படத் துவங்கும். கூடங்குளம் அணுமின் நிலையத்தின் பாதுகாப்பு தன்மை குறித்து, எந்தவிதமான அச்சத்துக்கும் இடமில்லை. பாதுகாப்பு காரணத்தை முன்வைத்து, கூடங்குளத்தில் போராட்டம் நடத்தப்பட்டு வருவதை அறிவோம். போராட்டம் நடத்துபவர்கள் எழுப்பும் கவலைகள் அகற்றப்படும். அந்தப் பிரச்னையில் இருந்து விரைவில் வெளிவருவோம்.
அதிகபட்ச பாதுகாப்பு: கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள முதல் யூனிட்டிலும், இரண்டாவது யூனிட்டிலும், பெரும்பாலான பணிகள் முடிவடைந்து விட்டன. இந்த இரண்டு யூனிட்களும், உற்பத்தியை துவங்கும் நிலையில் உள்ளன. கூடங்குளம் அணுமின் நிலையம் தொடர்பாக, இரு நாடுகளும் ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தப்படி, அனைத்து பணிகளும் நிறைவேற்றப்படும். அதிகபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகளை, இந்தியாவும், ரஷ்யாவும் திட்டமிட்டபடி, உறுதியாக இவ்விஷயத்தில் மேற்கொள்ளும். இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.
3 மற்றும் 4வது யூனிட்கள் எப்போது? கூடங்குளம் அணுமின் நிலையத்தின் மூன்று மற்றும் நான்காவது யூனிட்கள் அமைப்பது தொடர்பாக, ரஷ்யா மற்றும் இந்தியாவுக்கு இடையே, நேற்று ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இது தொடர்பாக ஒப்பந்தம், நேற்று கையெழுத்தாகவில்லை. என்றாலும், மூன்றாவது மற்றும் நான்காவது யூனிட்கள் அமைப்பதற்கான நிபந்தனை குறிப்புகள், நேற்று இறுதி செய்யப்பட்டன. இதுகுறித்து, ரஷ்ய அணுசக்தி ஒருங்கிணைப்பு அமைப்பின் தலைவர் செர்ஜி கிரியென்கோ கூறுகையில்,"கூடங்குளத்தில் மூன்றாவது மற்றும் நான்காவது யூனிட்கள் அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு, இந்திய தரப்பு தயாராக உள்ளதா என்பது குறித்து தெரியவில்லை' என்றார்.
அணு நீர்மூழ்கிக் கப்பல் மாத இறுதிக்குள் "சப்ளை': "அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று, தாக்குதல் நடத்தும் நீர்மூழ்கி கப்பல், இந்த மாத இறுதிக்குள் இந்தியாவிடம் வழங்கப்படும்' என, ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யா சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங், அந்நாட்டு அதிபர் மெட்வதேவுடன் நேற்று பேச்சு நடத்தினார். இதன் பின், ரஷ்ய ராணுவ ஒருங்கிணைப்பு பணிகள் மற்றும் தொழில்நுட்ப தலைவர் மிகாலி டிமிட்ரியேவ் கூறியதாவது: அணு ஆயுதங்களை தாங்கிச் சென்று, தாக்குதல் நடத்தும் திறனுடைய நீர்மூழ்கி கப்பல், விரைவில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும். 10 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் இந்த கப்பல் வழங்கப்படவுள்ளது. இந்தக் கப்பலில் 22 அணு ஆயுத ஏவுகணைகளை வைத்திருக்க முடியும். இந்த கப்பலில் இருந்து, 3,000 கி.மீ., தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்க முடியும். பல மாதங்களுக்கு நீருக்குள்ளேயே இருக்கும் திறனும், இந்த கப்பலுக்கு உண்டு. இவ்வாறு மிகாலி டிமிட்ரியேவ் கூறினார்.
No comments:
Post a Comment