என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி..அன்புடன் ஆனந்த் ...

Tuesday, January 25, 2011

ஜாதி கொடுமை

என் இனிய வலைத்தமிழ் மக்களே... அபின், கஞ்சா, பிரவுன் சுகர் போன்ற போதை வஸ்துக்களை விடவும், மது என்ற கொடிய அரக்கனை விடவும், பணம் என்னும் மயக்கத்தில் ஆழ்த்தும் பேராசையை விடவும் நம் இளைஞர்களை அதிகம் பீடித்திருப்பது 'ஜாதி' என்கின்ற கொடிய பேய்.. பிரசவம் பார்க்க மருத்துவனைக்குச் சென்ற என் தாய் மருத்துவர் என்ன ஜாதி என்று கேட்டிருப்பாளோ என்று என்னால் நினைக்க முடியவில்லை.

பிறந்தவுடனேயே கையை, காலை உதைத்துக் கொண்டு வீறிட்டு அலறிய நம்மை, முதலில் தூக்கியது எந்த ஜாதிக்காரர் என்பது நம்மைப் பெற்றெடுத்தவளுக்கேத் தெரியாது.. அக்கம்பக்கம் வீட்டார் முறை வைத்து நம்மைத் தூக்கி மகிழும்போதெல்லாம் ஜாதியைக் கேட்டுவிட்டுத்தான் நமது பெற்றோர், நம்மை அவர்களிடம் ஒப்படைத்திருப்பார்கள் என்று நாம் கருத வாய்ப்பே இல்லை.. நாட்டில் பெரும்பான்மையாக இருக்கும் ஏழை மக்களுக்கு மாத தவணையாக மளிகைப் பொருட்கள் கொடுத்த கடைக்காரர், நம்மிடம் ஜாதியைக் கேட்டுத்தான் கடன் கொடுத்திருப்பார் என்ற கருத்துக்குத் துளியும் இடமில்லை.

 தண்ணீருக்காக தெருத்தெருவாக அலைந்தபோது எவனோ ஒரு டிரைவர் ஓட்டி வந்த லாரியில் அடிதடிகளுக்கிடையில் தண்ணீரைப் பிடித்த நம் குடும்பத்தினர், அவ்வளவு கூட்டத்திலும், நெருக்கடியிலும் டிரைவரிடம் ஜாதி கேட்டிருப்பார்களோ என்று நினைக்கவே தோன்றவில்லை. பள்ளிக்கூடத்திற்குப் போகும்போது, பக்கத்து வீட்டுப் பையனைக் காட்டி "அவன்கூட போய் சூதானமா வந்திரு சாமி.." என்று தெருக்கோடி வரைக்கும் வந்து பயத்துடன் விட்டுவிட்டுப் போன என் அம்மாவுக்கு என் தோழனின் சாதியைப் பற்றிக் கவலையிருந்திருக்காது.. எழுத்துக் கூட்டிச் சொல்லிக் கொடுக்கும் ஆசான்கள் என்ன ஜாதி என்று கேட்டு எனது தந்தையும், அல்லது உங்களது தந்தையும் என்னையும், உங்களையும் பள்ளியில் சேர்த்திருக்க மாட்டார்கள். பள்ளியில் ஒவ்வொரு வகுப்பிலும் நம் அருகில் அமர்ந்திருந்தவர்களிடம் அவர்கள் என்ன ஜாதி என்று கேட்கக்கூடிய வாய்ப்பே நமக்குக் கிடைத்திருக்காது.

அவர்கள் நமது சக மாணவர்கள்.. நண்பர்கள்.. தோழர்கள்.. அவ்வளவுதான்.. ஓடிப் பிடித்து விளையாடும்போதும், காயம்பட்டு சிராய்ப்புடன் அழுகும்போது துணிகளைக் கொண்டுத் துடைத்துவிட்ட நண்பர்களிடம் என்ன ஜாதி என்று என்றைக்குமே நாம் யாரும் கேட்டதில்லை. எனக்குப் பிடித்த விளையாட்டை விளையாடச் சென்றபோது அரவணைத்துக் கொண்ட நண்பர்கள் அனைவரும் சொன்னது.. "நன்றாக பந்து வீசுகிறாய்.. டீமில் சேர்ந்துவிடு.." என்று.. அவர்களோ, நானோ ஜாதி பற்றிப் பேசிக் கொள்ளவில்லை. "சாயந்தரம் வீட்டுக்கு வா. எங்கம்மா எனக்கு கணக்குச் சொல்லித் தரும்போது நீயும் கூட இருந்து கேட்டுக்க.." என்று என்னை அழைத்துச் சென்ற நண்பனின் தாய், போகும்போதெல்லாம் சோறு போட்டு, சொல்லிக் கொடுத்தவர் அந்த ஒரு வருடப் படிப்பு முடியும்வரையில் கேட்காத கேள்வி, "நீ என்ன ஜாதி..?" என்பது... தந்தைக்கு உடல் நலம் சரியில்லை என்று மருத்துவனையில் உடன் இருந்து தாதி வேலைகளைச் செய்து கொண்டிருந்தபோது ஓடி வந்து உதவியர்கள் ஒரு நோயாளியாகப் பார்த்தார்கள்

 என் தந்தையை.. என் ஜாதியைக் கேட்கவில்லை. மருத்துவமனையில்தான் எத்தனை மருத்துவர்கள், எத்தனை நோயாளிகள், எத்தனை தாதிகள்.. அத்தனை பேரும் ஒருத்தருக்கொருத்தர் கேட்டுக் கொள்ளாத வார்த்தையும் யார் யார் என்ன ஜாதி என்பதைத்தான்.. தீ விபத்தில் காயம்பட்டு வந்த இளம்பெண்ணைக் காப்பாற்ற, பெட்டில் சேர்த்திருந்த மனைவிக்குத் துணையாக மருத்துவமனையில் தங்கியிருந்த ஒருவர், என் கண் முன்னேயே ஒரு பாட்டில் ரத்தம் கொடுத்து அப்பெண்ணின் உயிரைக் காப்பாற்றினார். அந்தப் பெண்ணும் சரி.. அந்த நபரும் சரி பரஸ்பரம் கேட்டுக் கொள்ளவேயில்லை என்ன ஜாதி என்று..? பஸ்ஸில் செல்லும்போது உட்கார சீட் கிடைத்தால் அருகில் இருப்பவர் நம்ம ஜாதி இல்லையே என்று சொல்லி யாரும் அமராமல் இருப்பதில்லை. டாஸ்மாக் கடையில் கூட்டத்தோடு கூட்டமாக 500 ரூபாய் தாளை நீட்டி பாட்டில் கேட்கும்போது, கொடுப்பவன் என்ன ஜாதி என்று எந்த ஜாதிச் சிங்கங்களும் கேட்பதில்லை.

அரை வயிறு சோற்றுக்காக வேறு வழியே இல்லாமல் தன் உடலை விற்க வரும் பெண்ணிடம், எந்த ஆணும் அவளுடைய ஜாதியைக் கேட்ட பின்பு தன் சட்டையைக் கழற்றியதாக நான் கேள்விப்பட்டதே இல்லை. பண உதவிக்காக 'தனம்' இருப்பவர்களை அணுகும்போது, அவர்களிடம் ஜாதி கேட்டு தங்களது வீட்டுத் தன்மானத்தை யாரும் அடகு வைப்பதில்லை. தங்களது வசதிக்காக வாகனத்தைத் தேர்வு செய்பவர்கள், அதை இந்த ஜாதிக்காரர் கடைகளில்தான் வாங்குவேன் என்று சொல்லி நான் கேட்டதில்லை. எவ்வளவு பசியோடு இருந்தாலும் என் ஜாதிக்கார நாயின் ஹோட்டலில்தான் நான் சாப்பிடுவேன் என்று எந்த ஜாதிக்காரனும் சொல்லி நான் கேட்டதில்லை. என் ஜாதிக்காரனின் பஸ்தான், கார்தான், வாகனம்தான் எனக்கும் என்று எந்த ஜாதிக்கார தறுதலையும் கதறி நான் பார்த்ததில்லை. எந்தக் கட்சியில் நான் இருந்தாலும் தேர்தலின்போது என் ஜாதிக்காரர்களிடம் மட்டும்தான் ஓட்டு கேட்பேன் என்று எந்தவொரு அரசியல்வாதி சொல்லியும் நான் படித்ததில்லை.

 லஞ்சப் பணம் வாங்கும்போது அதைக் கொடுப்பவன் தன் ஜாதிக்காரனா என்று கேட்ட பிறகு பணக்கட்டை உரசிப் பார்க்கும் பழக்கமுள்ள அரசியல்வாதிகளைப் பற்றி நான் கேள்விப்பட்டதில்லை.. எனக்குப் பிடித்த மேல்கல்வியைக் கற்கும்போது எனக்குப் பாடம் எடுத்த ஆசிரியர், கடைசிவரையிலும் என்னிடம் கேட்காதது நான் என்ன ஜாதி என்பதுதான். எனக்குப் பிடித்த வேலையில் இறங்கியபோது வாய்ப்பளித்தவர்களுக்கு இன்றுவரையிலும் நான் என்ன ஜாதி என்பது தெரியாது.. எனக்குப் பிடித்தத் தொழிலில் இறங்கியபோதும் உற்சாகமூட்டியவர்களும், தொழிலைக் கற்றுக் கொடுத்தவர்களும் என் ஜாதி என்ன என்று என்னைக் கேட்கவேயில்லை. எனக்குப் பிடித்தத் திரைப்படங்கள், நடிகர்கள், நடிகைகள் பற்றிப் பலரிடம் பேசும்போதும் இந்த ஜாதி பிரச்சினை என்னைச் சுற்றி எழவேயில்லை. நண்பர்களை விரட்டி விரட்டி சம்பாதித்துக் கொண்டிருக்கும்போது, அனைவருமே "தலைவா.." என்றுதான் சொன்னார்களே ஒழிய "நீ என்ன ஜாதி..?" என்று கேட்கவில்லை.

 எனக்குப் பிடித்தமான எழுத்துக்கு ஒரு வடிகால் கிடைக்கிறதே என்று வலைத்தளத்தில் நுழைய முயற்சித்த போது 'அரவணைத்த கைகள்' எழுது கோலைத்தான் கைகளில் திணித்ததே தவிர.. 'என் ஜாதி என்ன...?' என்று கேட்டுத் தயங்கி நிற்கவில்லை. எனக்குப் பிடித்த வலைத்தளத்தில் முனைப்போடு ஒரு நாள் இறங்கியபோது சொல்லிக் கொடுத்த 'தெய்வத்திற்கு' இன்றுவரை நான் என்ன ஜாதி என்பது தெரியாது.. எனக்குப் பிடித்தமான வகையில் முதன்முதலில் எழுதிய கட்டுரைக்கு முதல் பின்னூட்டமிட்ட அந்த நண்பரும் 'நான் என்ன ஜாதி..?' என்று கேட்டுப் போடவில்லை. அதற்குப் பதில் போட்ட எனக்கும் அதைக் கேட்கும் எண்ணமில்லை. எனக்குப் பிடித்தமான முறையில் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய வலைஞர்கள் அனைவரும், 'நான் என்ன ஜாதி..?' என்று கேட்டு தங்களது பேச்சைத் துவக்கவில்லை. எனக்குப் பிடித்த வலைத்தளத்தின் மாநாடுகளில் தங்கு தடையில்லாமல் சுற்றிக் கொண்டிருந்தபோது என் பெயர்தான் கேட்கப்பட்டதே தவிர, என் ஜாதி என்ன என்ற கேள்வி எங்கும் பிரஸ்தாபிக்கப்படவில்லை. நான் இந்த ஜாதியைச் சேர்ந்தவன் என்பதால்தான் உனது வலைத்தளத்திற்குள் வருகிறோம் என்று எவரும் என்னிடம் சொன்னதில்லையே.. ஆனால்.... இப்போது.... எனக்கு எப்போதும் பிடித்தமான முறையில் தொடர்ந்து எழுதி வரும்போது, "நான் என்ன ஜாதி..?" என்ற கேள்வியே இப்போதெல்லாம் பதிலாக வருகிறதே.. ஏன்? என் வாழ்க்கையின் இத்தனை நாட்களிலும் உடன் இருந்தவர்களுக்கும், இருந்து பழகியவர்களுக்குமே இதுவரையிலும் தோன்றாத எனது ஜாதியைப் பற்றிய சந்தேகம், இப்போது வலைத்தளத்தில் எங்கேயிருந்து தோன்றியது என்பது எனக்குத் தெரியவில்லை.

 குற்றம் என்னுடைய பிடித்தமானதினாலா அல்லது எனது எழுத்தினாலா? எனது பிடித்தமானதினால்தான் என்றால் உலகத்தில் உள்ள ஒவ்வொரு ஜாதியினரின் விருப்பமும் ஒரே மாதிரியிருக்கிறதா? எழுத்தினால்தான் என்றால் அத்தனை ஜாதியினரின் எழுத்தும் ஜாதிக்கு ஜாதிக்கு வித்தியாசமாகத் தெரிந்துவிடுமா? எனக்குப் புரியவில்லை. கட்டுரைகளுக்கும், செய்திகளுக்கும், எனது எண்ணங்களுக்கும் பதில் எனது ஜாதிதான் என்றால், எனது ஜாதியைச் சேர்ந்த அனைவரும் ஏன் என்னுடன் இல்லை..? என் ஜாதியைச் சேர்ந்த பலரும் ஏன் எனது தலைக்கு மேல் அமர்ந்திருக்கிறார்கள்.. நான் கீழே இருக்கிறேன்...? ஜாதிதான் ஒரு மனிதனின் எழுத்தைத் தீர்மானிக்கிறது என்று இந்த 'ஜாதிச் சிங்கங்கள்' எதை வைத்துச் சொல்கிறார்கள்? 'என்ன ஆதாரத்தின் கீழ் இந்தந்த ஜாதிக்காரர்களுக்கு இப்படித்தான் எழுத்து வரும்' என்று இந்த 'ஜாதிச் சிங்கங்கள்' யோசிக்கிறார்கள்..? இந்த 'ஜாதிச் சிங்கங்களும்', நானும் ஒரு நாளில் மரித்துப் போனால் அவரவர் வீடுகளில் ஒரு நாள்தானே வைத்திருக்கமுடியும். மறுநாள் தூக்கித்தானே ஆக வேண்டும்.

 இல்லாவிடில் வீடு நாறிவிடுமே.. கொண்டு போக வேண்டிய இடத்திற்குச் சென்றாலும், எல்லா ஜாதிக்கும் ஒரே மாதிரிதானே.. நெருப்பு, ஜாதிக்கு ஜாதி மாறாதே.. ஒரு சொம்பு.. ஒரே சொம்பு.. துணியால் மூடி ஒரு மணி நேரத்தில் கையில் தருவார்கள்.. அவ்வளவுதான்.. அதில் இதுவரையிலும் ஆட்டம் காட்டிய அத்தனை ஜாதித் திமிரும் இருக்கும். அப்போது அதைக் கையில் வைத்துக் கொண்டு என்ன செய்வார்கள்..? 

No comments:

Post a Comment