என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி..அன்புடன் ஆனந்த் ...

Monday, March 11, 2013

50 கோடிகளில் புரண்ட புரட்சிதலைவி, குவாட்டரில் புரண்ட விவசாயிகள்.


புரட்சிதலைவி விழாவில் கோடிகளில் புரண்ட ‘விவசாயிகள்’ குவாட்டரில் புரண்டனர்! 

தஞ்சை விவசாயிகளின் செல்வச் செழிப்பு தெரியவந்துள்ளது. வறட்சி நிவாரணம் கேட்டு போராடிய விவசாயிகள் கோடிகளில் புரள்கிறார்கள் என்ற ரகசியமும் வெளியாகியுள்ளது. 

தஞ்சையில் நேற்று நடைபெற்ற தமிழக முதல்வர் விவசாயிகள்’ ுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவில் விவசாயிகள் (!) ஐம்பது கோடி ரூபாயை தண்ணீர் போல செலவிட்டார்கள்! 

காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையை அரசிதழில் வெளியிட செய்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, தஞ்சையில் நேற்று நடைபெற்றது. வறட்சி நிவாரணம் கேட்டு போராடிய விவசாய சங்கங்களால் எப்படி இந்தனை கோடிகளை செலவளித்து பாராட்டு விழா நடத்த முடிந்தது என ஆச்சரியப்பட்டு போனார்கள் அப்பாவி பொதுமக்கள். 
“விவசாயிகளே நாட்டின் முதுகெலும்பு” என்று மற்றைய அரசியல்வாதிகள் சும்மா பேச்சுக்கு சொல்வார்கள். ஆனால், விவசாயிகளை கோடிகளில் புரளவிடும் சாதனையை ஓசைப்படாமல் செய்து காட்டியிருக்கிறார், புரட்சித் தலைவி அம்மா அவர்கள். இனி, தஞ்சை விவசாயிகளும், நாஞ்சில் சம்பத் போல இன்னோவா காரில் பறந்து திரிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

கடந்த மாதம் 27-ம் தேதி தான், தமிழ்நாடு காவேரி நீர்பாசன விளைபொருள்கள் விவசாயிகள் நல உரிமை பாதுகாப்பு சங்க பொதுச் செயலாளர் மன்னார்குடி ரங்கநாதன் உள்ளிட்ட 14 பேர் தமிழக முதல்வரை சந்தித்தனர். அன்றே பாராட்டு விழா அறிவிப்பு வெளியானது. 

மிக குறுகிய நாட்களில், வியக்க வைக்கும் அளவுக்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. தமிழக அரசு தலைமைச் செயலகத்தில் உயரதிகாரியாக உள்ள ‘விவசாயி’ ஒருவர் தங்சாவூருக்கு ஸ்பெஷல் அசைன்மென்ட் கொடுத்து அனுப்பி வைக்கப்பட்டார். மன்னார்குடி ட்ரவல்லர்ஸ் பங்களாவில் தங்கியிருந்த அந்த விவசாயி, தனது டொயோட்டா இன்னோவா காரில் பறந்து பறந்து ஏற்பாடுகளை மேற்பார்வை செய்தார். 

தஞ்சாவூர் மன்னர் சரபோஜி கல்லூரிக்கு சொந்தமான சுமார் 35 ஏக்கர் பரப்பளவு கொண்ட, முட்புதர்களும் குப்பைகளும் நிறைந்த இடம் தடாலடியாக சுத்தம் செய்யப்பட்டு, விழாவுக்காக தயாரானது. 

முதல்வர் வழி நெடுகிலும் வைத்திருந்த ஃபிளக்ஸ்களில், “உழவர்களின் உயிரே… விவசாயிகளின் வாழ்வாதாரமே… காவிரி தாயே… இனி யானை கட்டி போரடிப்போம்” என்று விவசாயிகள் முதல்வருக்கு ஓவர் டோஸ் பாராட்டு மழை பொழிந்திருந்தார்கள். 

இந்த விழாவிற்கு மக்களை அழைத்து வருவதற்கான வாகன செலவை அ.தி.மு.க மாவட்ட கழகம் ஏற்றுக் கொண்டது. மதுரை சிவகங்கை ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து எல்லாம் அரசு போக்குவரத்துக் கழகங்களில் ஆட்களை திரட்டி வந்திருந்தார்கள். 

விழாவுக்கு வரும் கட்சி விவசாயிகளுக்கு தலைக்கு 200 முதல் 500 ரூபாய் ரேட் பேசப்பட்டிருந்தது. தவிர, இரண்டு வேளை சாப்பாடு பிளஸ் ஒரு குவாட்டர் செலவை உள்ளாட்சி மன்ற நிர்வாகிகள் மற்றும் ஒன்றிய அளவிலான அ.தி.மு.க நிர்வாகிகள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என உத்தரவு! 

கழக கண்மணிகள் விழாவுக்கு வரும்போது கட்சிக்காரர்கள் போல வரலாமா? இதனால், கழக கண்மணிகள் கழனிவாழ் விவசாயிகள் போல் தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக, ஈரோடு, திருப்பூரில் இருந்து பண்டல் பண்டலாக பச்சை துண்டு வரவழைக்கப்பட்டு ஒன்றிய செயலாளர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டது. 

விழாவுக்கு வந்தவர்களுக்கு இந்தத் துண்டுகளையும் போட்டு பந்தலுக்கு வழியனுப்பி வைத்தார்கள். 

பச்சைத் துண்டு போட்ட கழக விவசாயிகள், மதிய உணவுடன் வழங்கப்பட்ட குவாட்டர் தள்ளாட்டத்துடன் விழா பந்தலுக்குள் தடவிதடவி சேர் தேடிய காட்சி, விவசாயிகளுக்கே பெருமை சேர்க்கும் காட்சியாக அமைந்திருந்தது

விழா பந்தலில் போடப்பட்டிருந்த சேர்களின் எண்ணிக்கை 29,000 தான். ஆனால், திரட்டப்பட்ட விவசாயிகள் கூட்டமோ ஒன்றரை லட்சம் பேரை தாண்டும். 

மாலை 5 மணிக்கு தொடங்கி 7 வரை விழா நடைபெறும் என்றுதான் முதல்வரின் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்திருந்தார்கள். ஆனால் கூட்டத்தைப் பார்த்து உற்சாகம் அடைந்த முதல்வர், மற்றவர்களை நீண்ட நேரம் பேச அனுமதித்ததோடு, அழைப்பிதழில் இடம்பெறாத தலைமை செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி. ராமலிங்கம், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் துரை.கோவிந்தராஜன், கு. தங்கமுத்து உள்ளிட்டவர்களையும் பேச சொன்னார். 

இதனால் இரவு 7.50 வரை விழா இழுத்தது. நேரம் ஆக, ஆக விவசாயிகள், “இரவு டிபனுடனும் குவாட்டர் உண்டுதானே?” என நிகழ்ச்சி அமைப்பார்களிடம் சந்தேகம் கேட்டுக்கொண்டு இருந்தார்கள். 

அ.தி.மு.க.-வின் கிளை அமைப்பான (தமிழக) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் பேச்சைக் கேட்டு பலமுறை குலுங்கிச் சிரித்தார் முதல்வர். “கிரிக்கெட் விளையாட்டில் சதம் அடித்தவர்களை மேன் ஆஃப் த மேட்ச் என்பார்கள். அந்த தொடர் முழுக்க தொடர்ச்சியாக சதம் அடித்தால் மேன் ஆஃப் த சீரிஸ் என்பார்கள். நம்முடைய தமிழக முதல்வர் அம்மா அவர்கள் மேன் ஆஃப் த சீரிஸாக திகழ்கிறார்” என்றார் தா.பா. சீரியசாக! 

யாராவது விவசாயிகள் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர்களாக இருந்தால், அவர்கள் கட்சிக்கே கும்பிடு போட்டுவிட்டு ஓடியிருப்பார்கள். 

நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் காவிரித் தாய்க்கு அலங்கார வளைவுகள், தஞ்சை முழுவதும் குழல் விளக்குகள், திருச்சி முதல் தஞ்சை வரை இருபுறமும் அ.தி.மு.க கொடிகள், ‘வரவேற்பு பதாதைகள், சுவரொட்டிகள், தஞ்சையில் இதற்காகவே புதிதாக உருவாக்கப்பட்ட ஹெலிபேடு, மிக பிரமாண்டமான விழா அரங்கம், மேடைக்கு ஒரு கிலோ மீட்டர் தொலைவிலிருந்து கரும்பால் இருபுறமும் தோரணம். 

பத்தடிக்கு ஒரு வாழைமர வளைவு, என்று உச்சபட்ச ஆடம்பரமாக நடந்து முடிந்திருக்கிறது தஞ்சை விவசாயிகளால் முதல்வருக்கு நடத்தப்பட்ட பாராட்டுவிழா. 

இதற்கான மொத்த செலவு ஐம்பது கோடி ரூபாயை தாண்டி விட்டதாக சொல்கிறார்கள். 

கர்நாடகத்திடம் தண்ணீர் கேட்டு கையேந்தி கிடைக்காமல் வறுமையில் உழன்று தற்போது மாநில அரசிடம் நிவாரணம் கேட்டு கையேந்தி நிற்கும் விவசாயிகளுக்கு ஏது இந்தளவுக்கு பணம்? விவசாயிகள் செலவு செய்ய வேண்டுமென்றால் தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மூன்று மாவட்டங்களை சேர்ந்த (அரசு நிவாரணம் பெற்றுள்ள மற்றும் பெறப்போகும்) அனைத்து விவசாயிகளும் ஆளுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால் கூட இந்த நிதி சேராது. 

விசாரித்தால், ஒரு ரூபாயை கூட நிஜ விவசாயிகள் செலவு செய்ய வில்லையாம். எல்லாம் ஆளும் கட்சி விவசாயிகளின் உபயம்தானாம். 

நிவாரணம் போதாது என்று சொல்லி விவசாயிகள் போராட்டங்கள் நடத்திவரும் நிலையில், இந்த பாராட்டு விழாவை சிறப்பாக நடத்தவில்லை என்றால் முதல்வரிடம் டோஸ் வாங்க வேண்டும் என்று நினைத்த அ.தி.மு.க.வினரும், அமைச்சர்களும் தங்களுக்குள் வேலைகளை பிரித்துக் கொண்டு, ‘கணக்காக’ செய்து முடித்திருக்கிறார்கள். ஆளாளுக்கு ஒரு செலவை ஏற்றுக் கொண்டார்கள். 

எல்லாம் ஒரு இன்வெஸ்ட்மென்ட்தானே.. போட்ட காசை ஒரு கான்ட்ராக்ட்டில் பிடித்து விடலாம்! 

விவசாய சங்க பிரமுகர்களை வெறும் அலங்கார பொம்மைகளாக மட்டும் மேடையேற்றினார்கள். விழாவுக்கு வந்திருந்தவர்களில் உண்மையான விவசாயிகள் பத்து சதவிகிதத்தை தாண்டாது. 

நிஜ விவசாயிகள் என்ன சொல்கிறார்கள்? “முதல்வர் விழாவிற்கு கூட்டம் சேர்ப்பதற்காக மறைமுகமாக செலவிடப்பட்ட கோடிகளை நிவாரண நிதியில் சேர்த்திருந்தால் தற்போது வெறும் ஐந்நூறும் ஆயிரமும் பெறும் எங்களுக்கு இன்னும் கொஞ்சம் கூடுதலாகவாவது நிவாரணம் கிடைத்திருக்குமே” என்று ஆதங்கப்படுகிறார்கள். 

“ஆடம்பரத்தை வெறுத்து விட்டேன் தமிழக மக்களுக்காக வாழ்கிறேன்” என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லும் முதல்வர் எப்படி இத்தனை ஆடம்பரமான ஒரு விழாவுக்கு சம்மதித்தார்? ஒருவேளை மம்மி ரிட்டர்னா

No comments:

Post a Comment