சென்னை: ராஜ்யசபா தேர்தலை முன்வைத்து நடைபெறும் அரசியல் பேரங்கள் தமிழக அரசியலை தலைகீழாகப் புரட்டி போட்டுவிடுமோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி நடத்துகிற கண்ணாமூச்சி ஆட்டம் 35 ஆண்டுகளுக்கு முந்தைய எம்.ஜி.ஆர்- இந்திரா காந்தி காலத்தை நினைவுபடுத்தாமல் இல்லை. தேமுதிக, தனித்தே போட்டியிடுவோம் என்று சொல்லி வந்த காலத்தில் இருந்தே அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி விரும்பி வந்தது. திமுக- காங்கிரஸ் அணியில் தேமுதிக இணைந்தால் பலமிக்கதாக இருக்கும் என்றெல்லாம் கூறப்பட்ட நிலையில் அதிமுகவுடன் கை கோர்த்தது தேமுதிக. பின்னர் அதிமுகவுடனான உறவை முறித்துக் கொண்டு வெளியேறியது தேமுதிக. அதேபோல் திமுக- காங்கிரஸ் இடையேயான உறவும் முறிந்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியைவிட்டு வெளியேறியது திமுக. இந்நிலையில் ராஜ்யசபா தேர்தல் வந்துள்ளது.
23 எம்.எல்.ஏக்களைக் கொண்டுள்ள திமுக, 22 எம்.எல்.ஏக்களைக் கொண்ட தேமுதிக, 5 எம்.எல்.ஏக்களைக் கொண்ட காங்கிரஸ் ஆதரவுடன் ஒரு எம்.பி. இடத்தைப் பிடித்துக் கொள்ள முயற்சித்தது. இந்த முயற்சி வெற்றி பெறவில்லை. இருப்பினும் காங்கிரஸ், பாமக, மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆதரவுடன் எப்படியும் வென்றுவிடுவது என்ற முடிவோடு திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி வேட்பாளராக மனுத்தாக்கல் செய்தார். ஆனால் புதிய திருப்பமாக தேமுதிகவும் களத்துக்கு வந்தது. தேமுதிகவும் காங்கிரஸ் கட்சி ஆதரவு எங்களுக்கு இருக்கிறது என்று தம்பட்டம் அடித்தது.
இதனால் பெரும் குழப்பம் உருவானது. திமுக தலைவர் கருணாநிதியை மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் நேரில் திடீரென சந்தித்ததே காங்கிரஸின் ஆதரவைத் தெரிவிக்கத்தான் என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது அதே ஜெயந்தி நடராஜன் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுகவுக்கு ஆதரவு அளிப்பது பற்றி காங்கிரஸ் மேலிடம் முடிவெடுக்கும் என்று அறிவித்திருக்கிறார். மேலும் திடீரென தேமுதிக எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனுக்கு படையெடுத்துச் சென்று ஆதரவு கோரியுள்ளனர். இதனால் காங்கிரஸ் கட்சி கண்ணாமூச்சி ஆட்டம் காட்டுகிறதோ என்ற சந்தேகம் திமுகவுக்கு எழுந்துள்ளது.
அத்துடன் தேமுதிக ஆதரவைக் கோரி நேரில் வந்திருக்கும் நிலையில் இந்த உறவை இறுகப் பற்றிக் கொண்டு லோக்சபா தேர்தலை எதிர்கொள்ளலாம் என்பதே காங்கிரஸ் நிர்வாகிகள் பலரது கருத்தாக இருக்கிறது. இதனால் காங்கிரஸ் மேலிடமும் தமிழகத்தில் வழக்கமாக பின்பற்றுகிற வளர்ந்து வருகிற கட்சியை அணைத்துக் கொண்டு வளர்த்துவிட்டு திமுகவை தனிமைப்படுத்துவது என்ற் பார்முலாவை கடைபிடிக்கலாம் எனவும் கூறப்படுகிறது. அதாவது 1972ல் திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டு அதிமுக உதயமானது. 1973ஆம் ஆண்டு திண்டுக்கல் லோக்சபா இடைத்தேர்தலிலும் அடுத்த ஆண்டு கோயம்புத்தூர் சட்டசபை இடைத் தேர்தலிலும் வெற்றி பெற்று அது வேர்பிடித்தது. பின்னர் காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கம் காட்டத் தொடங்கியது. அவசரநிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்ட போது அதிமுகவும் காங்கிரசும் நெருங்கி வந்தன. 1976ஆம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டினால் திமுக அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. பின்னர் 1980களில் அதிமுக- காங்கிரஸ் உறவில் விரிசல் ஏற்பட அந்த இடத்தை திமுக நிரப்பி லோக்சபா தேர்தலில் பெரும் வெற்றி பெற்று எம்.ஜி.ஆர். அரசும் டிஸ்மிஸ் செய்யப்பட்டது. ஆனால் அதன் பின்னர் எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் நரசிம்மராவ் காலம் வரையிலும் கூட அதிமுக- காங்கிரஸ் கூட்டணி "இயற்கையான கூட்டணி" என்றே வலம் வந்தது. அதிமுகவில் பிளவு ஏற்பட்டதால் இடையில் திமுக ஆட்சியைக் கைப்பற்ற முடிந்ததே தவிர பெரும் சோதனைக்காலமாகவே அக்கட்சிக்கு இருந்து வந்தது. பின்னர் மத்தியில் நிலையான வலுவான ஒரு கட்சி ஆட்சி அமைவது சாத்தியம் இல்லாமல் போகவே காங்கிரஸ், பாஜக அணிகளில் திமுக மாறி மாறி அமர்ந்து விலகி வருகிறது. தற்போது தமிழக அரசியலில் 10% வாக்குகளுடன் வளர்ந்து வரக்கூடிய கட்சியாக தேமுதிக இருக்கிறது. திமுகவை என்றுமே ராகுல் காந்தி மதிப்பது இல்லை என்பது பொதுவான கருத்து தற்போது காங்கிரஸில் ராகுலின் கை ஓங்கியுள்ள நிலையில் திமுகவை ஓரம்கட்டிவிட்டு தேமுதிகவை வளைத்துப் போடவே அக்கட்சி விரும்புவதாக சொல்லப்படுகிறது. இதற்கான வலுவான அடித்தளமாக ராஜ்யசபா தேர்தல் அமைந்திருக்கிறது என்பது நிதர்சனம்.. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தேமுதிகவுடன் "இயற்கையான கூட்டணி" அமைத்துக் கொண்டு இனிவரும் காலத்தில் தமிழகத் தேர்தல்களை எதிர்கொள்ளலாம் என்ற நம்பிக்கை காங்கிரஸிடம் மேலோங்கியே இருக்கிறது. அதாவது அன்று எம்.ஜி.ஆரின் அதிமுகவை காங்கிரஸ் தலைவராக இந்திரா காந்தி மதித்து வளைத்துப் போட்டார். இன்று கருப்பு எம்.ஜி.ஆர். என அழைத்துக் கொள்ளும் விஜயகாந்தின் தேமுதிகவை காங்கிரஸ் தலைவரான சோனியாவும் அவரது மகன் ராகுலும் மதித்து வளைத்துப் போடவே சாத்தியம் அதிகம் எனப்படுகிறது. அப்படி ஒன்று நிகழ்ந்தால் காங்கிரஸ் கட்சியை ஏச்சுகளுக்கும் பேச்சுகளுக்கும் மத்தியில் விழுந்து விழுந்து ஆதரித்த திமுகவின் எதிர்காலம் என்னவாகும்? என்பது பெரும் கேள்வி
No comments:
Post a Comment