என்னுடைய பதிவை படிக்க வந்தமைக்கு நன்றி..அன்புடன் ஆனந்த் ...

Thursday, June 20, 2013

ராஜ்யசபா தேர்தல்.. கனிமொழியின் வெற்றியை தீர்மானிக்கப் போவது ஜெயலலிதாவே...எப்படி

சென்னை: ராஜ்யசபா தேர்தலில் திமுக வேட்பாளரான கனிமொழியின் வெற்றியை தீர்மானிக்கக் கூடிய மிக துருப்புச் சீட்டு என்பது அதிமுக பொதுச்செயலரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவின் கையில்தான் இருக்கிறது என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் 6 ராஜ்யசபா எம்.பி.க்கள் இடத்துக்கான தேர்தல் வரும் 27-ந் தேதி நடைபெற இருக்கிறது. இதில் 5 வேட்பாளர்களின் வெற்றி உறுதியாகிவிட்டது.
ராஜ்யசபா தேர்தல்.. கனிமொழியின் வெற்றியை தீர்மானிக்கப் போவது ஜெயலலிதாவே...எப்படி?

 6வது எம்.பி. இடத்துக்கு திமுகவின் வேட்பாளராக கனிமொழியும் தேமுதிகவின் வேட்பாளராக இளங்கோவனும் களத்தில் இருக்கின்றனர். திமுக வேட்பாளர் கனிமொழியை 2 எம்.எல்.ஏக்கள் கொண்ட மனித நேய மக்கள் கட்சி ஆதரிக்கிறது. இதனால் திமுகவுக்கு தற்போதைய ஆதரவு எண்ணிக்கை 25ஆக அதிகரித்துள்ளது. கனிமொழியையே பாட்டாளி மக்கள் கட்சியும் ஆதரிக்கக் கூடும் எனத் தெரிகிறது. அப்படியான ஒருநிலையில் கனிமொழிக்கான ஆதரவு 28ஆக இருக்கும். தேமுதிக வேட்பாளர் இளங்கோவனை காங்கிரஸ் ஆதரிககக் கூடும் என்று கூறப்படுகிறது. தற்போதைய காங்கிரஸ் கட்சியானது ராகுல் காந்தியின் கட்டுப்பாட்டில் இருப்பதால் காங்கிரஸ் ஆதரிக்கலாம் என்று வாதிடப்படுகிறது.

 அப்படியே காங்கிரஸ் ஆதரிக்கும் போது 22+5= 27 என்ற ஒரு நிலை உருவாகலாம். இந்தச் சூழலில் கனிமொழி வெல்ல வேண்டுமா? தேமுதிகவின் இளங்கோவனை ஜெயிக்க வைத்து ‘அதிருப்தி' எம்.பி.யாக தம் வசம் வைத்துக் கொள்வதா? என்பதை தீர்மானிக்கும் இடத்தில் ஜெயலலிதாவே இருக்கிறார்...ஏனெனில் அவர் வசம் 7 தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏக்கள் உள்ளனர். கனிமொழி ஜெயிப்பதால் தமக்கு ஒரு பயனும் இல்லை. .ஆனால் தேமுதிகவின் வேட்பாளரை ஜெயிக்க வைத்து ஒரு அதிருப்தி எம்.பி.யை உருவாக்கி வைப்பதால் தமக்கு லாபம் என ஜெயலலிதா கருதினால் அந்த 7 தேமுதிக அதிருப்தி வேட்பாளர்களையும் தேமுதிக வேட்பாளருக்கே வாக்களிக்க சொன்னால் இளங்கோவன் வெற்றி பெற்றுவிடுவார் எனவும் கூறப்படுகிறது. ஆக கனிமொழி வெல்லப் போவது ஜெயலலிதாவின் கையில்



Wednesday, June 19, 2013

சினிமாவுக்கு வருவதற்கு முன் தமிழ் நடிகர்கள் செய்த தொழில்கள்

நமது திரைப்பட கலைஞர்கள், சினிமாவுக்கு வருவதற்கு முன் பலர். பல்வேறு

தொழில்களில், பணிகளில் ஈடுப்பட்டிருக்கிறார்கள்.யார் யார் எந்தெந்த 

தொழிலில் ஈடுபட்டிருந்தார்கள்.





ஜெமினி கணேசன்
போட்டோ உதவி பேராசிரியர்

ஏ.வி.மெய்யப்பன்
சைக்கிள் கடை
வி.எஸ்.ராகவன்
பத்திரிகையாளர்

ராகவன்
சுங்க இலாகா அதிகாரி
ஆனந்தராஜ்
சாராய வியாபாரம்

சிவக்குமார்
ஓவியர்
ரஜினிகாந்த்
பஸ் கண்டக்டர்

ஜெய்கணேஷ்
காய்கறி வியாபாரம்
நாகேஷ்
ரயில்வே குமாஸ்தா

கே.ஆர்.ஜி.
சிட்பண்ட்ஸ்
பாண்டியன்
வளையல் கடை
விஜயகாந்த்
அரிசி கடை 

ராஜேஷ்
பள்ளி ஆசிரியர்
ஆர்.சுந்தர் ராஜன்
-பேக்கிரி கடை 

பீட்டர் செல்வக்குமார்
ரயில்வே அதிகாரி
பாக்யராஜ்
ஜவுளிக்கடை 

அஜீத்
டூ வீலர் மெக்கானிக்
ரகுவரன்
உணவு விடுதி 

பூர்ணம் விஸ்வநாதன்
வானொலி அறிவிப்பாளர்
அமோகா
ஹோட்டல் போட்டோசப்ஷனிஸ்ட் 

பாரதிராஜா
மலேரியா ஒழிப்பு இன்ஸ்பெக்டர்
டெல்லி கணேஷ்
ராணுவ வீரர் 

மேஜர் சுந்தர்ராஜன்
அக்கவுண்டென்ட்
பாலச்சந்தர்
அக்கவுண்டென்ட் 

புலவர் புலமைப்பித்தன்
பள்ளி தலைமையாசிரியர்
கே.விஜயன்
ரயில்வே ஒர்க்ஷாப் ஊழியர் 

சாருஹாசன்
வக்கீல்
விசு
டி.வி.எஸ்.பணியாளர் 

தலைவாசல் விஜய்
ஓட்டல் பணியாளர்
மோகன்
வங்கி ஊழியர் 

ராஜீவ்
ஓட்டல் கேட்டரிங்
எஸ்.வி.சேகர்
மேடை நாடக ஒலி அமைப்பாளர் 

தியாகராஜன்
இசைத்தட்டு விநியோக பிரதிநிதி
பாண்டியராஜன்
பார்க்காத வேலை,தொழில் இல்லை 

ஏ.எஸ்.பிரகாசம்
போட்டோ பேராசிரியர்
பெரியார்தாசன்
போட்டோ பேராசிரியர் 

கவிஞர் வைரமுத்து
சட்ட மொழிபெயர்ப்பு துறையில் மொழி பெயர்ப்பாளர்
முக்தா சீனிவாசன்
அலுவலக டைப்பிஸ்ட் 

நடிகை காஞ்சனா
ஏர் ஹோஸ்டஸ்
கமலாகாமேஷ்
மெல்லிசை பாடகி 

வடிவுக்கரசி
ஹோட்டல் போட்டோசப்னிஸ்ட்
சுஹாசினி
உதவி ஒளிப்பதிவாளர் 

சரத்குமார்
பத்திரிகை அலுவலக நிர்வாகம்
இந்து
தொலைக்காட்சி அறிவிப்பாளர் 

ஃபாத்திமா பாபு
தொலைக்காட்சி அறிவிப்பாளர்
டைரக்டர் வசந்த்
குமுதம் பத்திரிகை நிருபர் 

டைரக்டர் கார்வண்ணன்
ஆட்டோ டிரைவர்
தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன்
லேடீஸ் ஹாஸ்டல் வாட்ச்மேன் 

டைரக்டர் சேரன்
தொழிலாளி (சிம்சன்)
தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்தினம்
விஜயசாந்தியின் மேக்கப்மேன் 

தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன்
இங்கிலிஸ் எலக்ட்ரிகல் வாட்ச்மேன்
பாடலாசிரியர் பழனிபாரதி
ஆனந்தவிகடன் போட்டோப்போர்ட்டர்

அன்று அதிமுகவுக்கு இந்திரா.. இன்று தேமுதிகவுக்கு சோனியா...

சென்னை: ராஜ்யசபா தேர்தலை முன்வைத்து நடைபெறும் அரசியல் பேரங்கள் தமிழக அரசியலை தலைகீழாகப் புரட்டி போட்டுவிடுமோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. குறிப்பாக காங்கிரஸ் கட்சி நடத்துகிற கண்ணாமூச்சி ஆட்டம் 35 ஆண்டுகளுக்கு முந்தைய எம்.ஜி.ஆர்- இந்திரா காந்தி காலத்தை நினைவுபடுத்தாமல் இல்லை. தேமுதிக, தனித்தே போட்டியிடுவோம் என்று சொல்லி வந்த காலத்தில் இருந்தே அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி விரும்பி வந்தது. திமுக- காங்கிரஸ் அணியில் தேமுதிக இணைந்தால் பலமிக்கதாக இருக்கும் என்றெல்லாம் கூறப்பட்ட நிலையில் அதிமுகவுடன் கை கோர்த்தது தேமுதிக. பின்னர் அதிமுகவுடனான உறவை முறித்துக் கொண்டு வெளியேறியது தேமுதிக. அதேபோல் திமுக- காங்கிரஸ் இடையேயான உறவும் முறிந்து காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியைவிட்டு வெளியேறியது திமுக. இந்நிலையில் ராஜ்யசபா தேர்தல் வந்துள்ளது.

 23 எம்.எல்.ஏக்களைக் கொண்டுள்ள திமுக, 22 எம்.எல்.ஏக்களைக் கொண்ட தேமுதிக, 5 எம்.எல்.ஏக்களைக் கொண்ட காங்கிரஸ் ஆதரவுடன் ஒரு எம்.பி. இடத்தைப் பிடித்துக் கொள்ள முயற்சித்தது. இந்த முயற்சி வெற்றி பெறவில்லை. இருப்பினும் காங்கிரஸ், பாமக, மனித நேய மக்கள் கட்சி, புதிய தமிழகம் ஆதரவுடன் எப்படியும் வென்றுவிடுவது என்ற முடிவோடு திமுக தலைவர் கருணாநிதியின் மகள் கனிமொழி வேட்பாளராக மனுத்தாக்கல் செய்தார். ஆனால் புதிய திருப்பமாக தேமுதிகவும் களத்துக்கு வந்தது. தேமுதிகவும் காங்கிரஸ் கட்சி ஆதரவு எங்களுக்கு இருக்கிறது என்று தம்பட்டம் அடித்தது. 
அன்று அதிமுகவுக்கு இந்திரா.. இன்று தேமுதிகவுக்கு சோனியா? திமுகவின் எதிர்காலம்?


இதனால் பெரும் குழப்பம் உருவானது. திமுக தலைவர் கருணாநிதியை மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராஜன் நேரில் திடீரென சந்தித்ததே காங்கிரஸின் ஆதரவைத் தெரிவிக்கத்தான் என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது அதே ஜெயந்தி நடராஜன் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், திமுகவுக்கு ஆதரவு அளிப்பது பற்றி காங்கிரஸ் மேலிடம் முடிவெடுக்கும் என்று அறிவித்திருக்கிறார். மேலும் திடீரென தேமுதிக எம்.எல்.ஏக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனுக்கு படையெடுத்துச் சென்று ஆதரவு கோரியுள்ளனர். இதனால் காங்கிரஸ் கட்சி கண்ணாமூச்சி ஆட்டம் காட்டுகிறதோ என்ற சந்தேகம் திமுகவுக்கு எழுந்துள்ளது.


அத்துடன் தேமுதிக ஆதரவைக் கோரி நேரில் வந்திருக்கும் நிலையில் இந்த உறவை இறுகப் பற்றிக் கொண்டு லோக்சபா தேர்தலை எதிர்கொள்ளலாம் என்பதே காங்கிரஸ் நிர்வாகிகள் பலரது கருத்தாக இருக்கிறது. இதனால் காங்கிரஸ் மேலிடமும் தமிழகத்தில் வழக்கமாக பின்பற்றுகிற வளர்ந்து வருகிற கட்சியை அணைத்துக் கொண்டு வளர்த்துவிட்டு திமுகவை தனிமைப்படுத்துவது என்ற் பார்முலாவை கடைபிடிக்கலாம் எனவும் கூறப்படுகிறது. அதாவது 1972ல் திமுகவில் இருந்து எம்.ஜி.ஆர். நீக்கப்பட்டு அதிமுக உதயமானது. 1973ஆம் ஆண்டு திண்டுக்கல் லோக்சபா இடைத்தேர்தலிலும் அடுத்த ஆண்டு கோயம்புத்தூர் சட்டசபை இடைத் தேர்தலிலும் வெற்றி பெற்று அது வேர்பிடித்தது. பின்னர் காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கம் காட்டத் தொடங்கியது. அவசரநிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்ட போது அதிமுகவும் காங்கிரசும் நெருங்கி வந்தன. 1976ஆம் ஆண்டு ஊழல் குற்றச்சாட்டினால் திமுக அரசு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. பின்னர் 1980களில் அதிமுக- காங்கிரஸ் உறவில் விரிசல் ஏற்பட அந்த இடத்தை திமுக நிரப்பி லோக்சபா தேர்தலில் பெரும் வெற்றி பெற்று எம்.ஜி.ஆர். அரசும் டிஸ்மிஸ் செய்யப்பட்டது. ஆனால் அதன் பின்னர் எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பின்னர் நரசிம்மராவ் காலம் வரையிலும் கூட அதிமுக- காங்கிரஸ் கூட்டணி "இயற்கையான கூட்டணி" என்றே வலம் வந்தது. அதிமுகவில் பிளவு ஏற்பட்டதால் இடையில் திமுக ஆட்சியைக் கைப்பற்ற முடிந்ததே தவிர பெரும் சோதனைக்காலமாகவே அக்கட்சிக்கு இருந்து வந்தது. பின்னர் மத்தியில் நிலையான வலுவான ஒரு கட்சி ஆட்சி அமைவது சாத்தியம் இல்லாமல் போகவே காங்கிரஸ், பாஜக அணிகளில் திமுக மாறி மாறி அமர்ந்து விலகி வருகிறது. தற்போது தமிழக அரசியலில் 10% வாக்குகளுடன் வளர்ந்து வரக்கூடிய கட்சியாக தேமுதிக இருக்கிறது. திமுகவை என்றுமே ராகுல் காந்தி மதிப்பது இல்லை என்பது பொதுவான கருத்து தற்போது காங்கிரஸில் ராகுலின் கை ஓங்கியுள்ள நிலையில் திமுகவை ஓரம்கட்டிவிட்டு தேமுதிகவை வளைத்துப் போடவே அக்கட்சி விரும்புவதாக சொல்லப்படுகிறது. இதற்கான வலுவான அடித்தளமாக ராஜ்யசபா தேர்தல் அமைந்திருக்கிறது என்பது நிதர்சனம்.. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தேமுதிகவுடன் "இயற்கையான கூட்டணி" அமைத்துக் கொண்டு இனிவரும் காலத்தில் தமிழகத் தேர்தல்களை எதிர்கொள்ளலாம் என்ற நம்பிக்கை காங்கிரஸிடம் மேலோங்கியே இருக்கிறது. அதாவது அன்று எம்.ஜி.ஆரின் அதிமுகவை காங்கிரஸ் தலைவராக இந்திரா காந்தி மதித்து வளைத்துப் போட்டார். இன்று கருப்பு எம்.ஜி.ஆர். என அழைத்துக் கொள்ளும் விஜயகாந்தின் தேமுதிகவை காங்கிரஸ் தலைவரான சோனியாவும் அவரது மகன் ராகுலும் மதித்து வளைத்துப் போடவே சாத்தியம் அதிகம் எனப்படுகிறது. அப்படி ஒன்று நிகழ்ந்தால் காங்கிரஸ் கட்சியை ஏச்சுகளுக்கும் பேச்சுகளுக்கும் மத்தியில் விழுந்து விழுந்து ஆதரித்த திமுகவின் எதிர்காலம் என்னவாகும்? என்பது பெரும் கேள்வி

Tuesday, June 18, 2013

தில்லு முல்லு

நடிகர் : சிவா
நடிகை :இஷா தல்வார்
இயக்குனர் :பத்ரி
இசை :எம்.எஸ்.விஸ்வநாதன், யுவன் சங்கர் ராஜா
ஓளிப்பதிவு :லஷ்மண்
வேலைவெட்டி இல்லாமல் தன்னுடைய தங்கை மற்றும் மாமாவுடன் சென்னையில் வசித்துவரும் சிவாவின் அப்பா, தவறான ஒருவருக்கு சாட்சி கையெழுத்துப் போடப்போய் தன்னுடைய வீட்டையே வங்கிக்கு தாரைவார்த்துக் கொடுக்கவேண்டிய நிலைமை ஏற்படுகிறது.

இதனால் கடன்காரனான சிவா, கடனை அடைக்க ஒரு வேலைக்கு செல்ல முடிவெடுக்கிறார். அவருடைய மாமாவான இளவரசு, மிகவும் கண்டிப்புடன் இருக்கும் தன்னுடைய நண்பன் பிரகாஷ்ராஜின் மினரல் வாட்டர் கம்பெனியில் சிவாவை சேர்த்துவிட முடிவெடுக்கிறார்.

ஆனால், பிரகாஷ் ராஜுக்கோ வேலையில் சேருவதற்கு யாரும் சிபாரிசு செய்வது பிடிக்காது. மேலும் முருக பக்தரான அவருக்கு, அவருடைய பாணியிலேயே சென்று எப்படியாவது வேலையைப் பெற்றுவிடவேண்டும் என்று ஐடியா கூறுகிறார். அதன்படி, தனக்கு கொஞ்சமும் பழக்கமில்லாத பக்தி வேடமணிந்து இண்டர்வியூவுக்கு செல்கிறார் சிவா. தன்னுடைய பெயருக்கு விளக்கம் சொல்லும்விதமே பிரகாஷ் ராஜூக்கு சிவாவை பிடித்துவிட உடனே வேலைக்கு அமர்த்துகிறார்.

வேலையில் சேர்ந்தவுடன் ஒருநாள் கிரிக்கெட் மேட்ச் பார்ப்பதற்காக சிவாவின் அம்மா பாத்ரூமில் வழுக்கி விழுந்துவிட்டதாக சிவாவின் நண்பர்கள் அலுவலகத்திற்கு போன் செய்ய, சிவாவோ இல்லாத அம்மாவை, இருப்பதாக பொய் சொல்லிவிட்டு நண்பர்களோடு சேர்ந்து மேட்ச் பார்க்க சென்றுவிடுகிறார்.

அப்போது, நண்பரின் விருப்பத்திற்காக மேட்ச் பார்க்க வரும் பிரகாஷ் ராஜ் மைதானத்தில் சிவா இருப்பதை பார்த்துவிடுகிறார். மறுநாள் அலுவலகத்தில் வந்து சிவாவிடம் கேட்க, சிவாவோ அது தான் இல்லை தன்னுடைய தம்பி கங்குலி கந்தன் என்று சொல்கிறார். நாங்கள் இருவரும் இரட்டையர்கள். தம்பி கராத்தே மாஸ்டர் என்றும் கூறுகிறான்.

மேலும், இதற்கு தன்னுடைய நண்பன் சத்யன் டபுள் ஹீரோவாக நடிக்கும் படமொன்றின் டெக்னிக்கை பயன்படுத்துகிறார். அதாவது சாதாரண கண்களோடு வந்தால் அண்ணன், பூனைக் கண்களோடு வந்தால் அது தம்பி என்று பிரகாஷ் ராஜிடம் சொல்கிறார். இதை உண்மை என்று நம்புகிறார் பிரகாஷ் ராஜ்.

இந்நிலையில் தன்னுடைய மகளான இஷா தல்வாருக்கு கராத்தே பயிற்சி அளிக்க தம்பியை தனது வீட்டுக்கு வரச்சொல்லுமாறு அண்ணன் சிவாவிடம் கூறுகிறார் பிரகாஷ்ராஜ். அவருடைய பேச்சுக்கு எதிர்பேச்சு பேசமுடியாத சிவா, தனது நண்பன் சத்யனிடமிருந்து கராத்தே ஆடையையும், பூனை கண்களுக்கான காண்டக்ட் லென்ஸும் வாங்கி போட்டுக் கொண்டு பிரகாஷ்ராஜ் வீட்டிற்கு சென்று பயிற்சி கொடுக்கிறார்.

இஷா தல்வாருக்கு பயிற்சி கொடுக்கும் தம்பி சிவாவை இஷா தல்வார் காதலிக்கிறார். மறுமுனையில், சிவா இரட்டையர்கள்தானா? என்ற சந்தேகம் பிரகாஷ்ராஜூக்கு தொடர்ந்து இருந்து வருகிறது. இதை கண்டறிவதற்கு தனியாக ஒரு டிடெக்டிவை வைக்கிறார் பிரகாஷ் ராஜ். தன்னுடைய தில்லு முல்லுகளால் அதிலிருந்து எஸ்கேப் ஆகிறார் சிவா.

உடனே, தன்னை நல்லவனாக காட்டிக்கொள்ளும் பொருட்டு பிரகாஷ் ராஜிடம் சென்று அண்ணன்- தம்பி இருவருமே வேலையை விட்டுவிடுவதாக கூறுகிறார். ஆனால், சிவாவின்  தில்லு முல்லுகளை அறியாத பிரகாஷ் ராஜ், அவரை வேலையிலிருந்து வெளியே அனுப்ப மறுக்கிறார். தன்னுடைய தவறுக்கு சிவாவின் அம்மாவை சந்தித்து மன்னிப்பு கோரப் போவதாக பிரகாஷ் ராஜ் கூறியதும் சிவா சற்று தள்ளாடிப் போகிறார்.

உடனே, வீட்டுக்கு சென்று வீட்டு வேலை செய்யும் கோவை சரளாவை சீக்கிரம் சீக்கிரமாக அம்மா வேடம் போட்டு அமரவைக்கிறார். சிவா வீட்டுக்கு செல்லும் பிரகாஷ் ராஜ் கோவை சரளாவின் பக்திமயமான வேஷத்தை கண்டு மெய்சிலிர்த்துப் போகிறார். இதன்மூலம் சிவா மீது பிரகாஷ்ராஜ் வைத்திருந்த மதிப்பு மேலும் இருமடங்காகிறது. இந்நிலையில் தம்பி சிவா- இஷா தல்வாரின் காதல் பிரகாஷ் ராஜூக்கு தெரியவருகிறது. அவர்களை பிரிக்க நினைக்கிறார். அதே நேரத்தில் அண்ணன் சிவாவிற்கு தன்னுடைய மகளை கட்டிக் கொடுக்க முடிவெடுக்கிறார்.

இறுதியில் சிவா தன்னுடைய தில்லுமுல்லுகளை பிரகாஷ் ராஜிடம் எடுத்துக்கூறினாரா? இஷா தல்வாரை கரம்பிடித்தாரா என்பதே மீதிக்கதை. 

ஏற்கெனவே ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘தில்லு முல்லு’ படத்தின் ரீமேக்தான் இந்தப்படம். அப்போது இப்படத்தை எடுத்தபோது, ஆக்சன் ஹீரோவாக இருந்துவந்த ரஜினி, காமெடி வேடத்திற்கு பொருந்துவாரா? என பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. அந்த விமர்சனங்களையெல்லாம் கே.பாலச்சந்தர் தவிடுபொடியாக்கினார். தற்போது, இப்படத்தில் ரஜினியின் நடிப்புக்கு சிவா ஈடுகொடுப்பாரா? என்ற சந்தேகம் எழுந்தது. அதையும் தவிடுபொடியாக்கிறது இந்த சிறிய டீம்.

ஒரே உருவத்தில் அண்ணன்- தம்பி என இரண்டு வேடங்களில் நடித்துள்ள சிவாவின் பலமே அவருடைய அசாதாரணமான முகபாவனைகள்தான். தன்னுடைய முதலாளி ‘பேஸ்புக்ல இருக்கீங்களா?’ என்று கேட்டதும், பதிலுக்கு இவர் ‘இல்ல திருவான்மியூர்ல இருக்கிறேன்’ என்று சொல்வதாகட்டும், ‘காந்திக்கு அப்புறம் டிரெஸ்-க்காக கலாய் வாங்குவது நானாகத்தான் இருக்கும்’ என்று சொல்வதாகட்டும், சிவா சொல்லும்போது மட்டுமே சிரிப்பு வருகிறது. படம் முழுவதும் பயங்கர கைதட்டல் பெறுவது இவர் பேசும் வசனங்கள்தான். சிவாவுக்கு ‘அகில உலக சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டம் கொடுத்ததில் தவறு ஒன்றும் இல்லை என்றே சொல்லலாம்.

தீவிரமான முருக பக்தராக வருகிறார் பிரகாஷ் ராஜ். சிவா செய்யும் தில்லு முல்லுகளை அறியாத அப்பாவியான முகம். குங்பு சண்டையில் ரவுடிகளை வெளுத்து வாங்கிவிட்டு, ‘பெத்தவங்க பேச்சை இப்ப உள்ள பிள்ளைங்க எங்க கேட்கிறாங்க’ என்று அசால்ட்டாக பேசி, பெரிய கைதட்டல்களை பெற்றுவிடுகிறார்.

வாயைத் திறந்தாலே சென்னை பாஷையில் வெளுத்துக்கட்டும் கோவை சரளாவுக்கு, அம்மா என்ற பதவியை கொடுத்து, வாயில் வேல் குத்தி ஊமையாக்கிவிட்டார்கள். இருந்தாலும், மைன்ட் வாய்ஸ்-ல் இவர் பேசும் வசனம் கலகலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நாயகி இஷா தல்வார் அழகு பதுமையாய் வந்து போயிருக்கிறார். அரை குறை ஆடையில் படம் முழுக்க கவர்ச்சியை வாரி வழங்கியிருக்கிறார். நாயகனைப் பற்றி ரவுடிகளிடம் இவர் பேசும் வீர வசனங்களில் வீரம் இல்லை.

சிவாவின் மாமாவாக வரும் இளவரசு, பிரகாஷ் ராஜிடம் மானேஜராக பணிபுரியும் மனோபாலா, நடிகராக வரும் சத்யன், ஆகியோரும் படத்தின் ஓட்டத்துக்கு உயிர் கொடுத்துள்ளனர்.

சிவாவின் தங்கையாக வரும் மோனிஷா பார்க்க அழகாக இருக்கிறார். இவருக்கு நடிப்பதற்குண்டான வாய்ப்பு குறைவே என்றாலும் தன்னுடைய பணியை செவ்வனே செய்திருக்கிறார்.

இதுவரையிலான படங்களில் வேஷ்டி, லுங்கி என சுற்றிக்கொண்டிருந்த சூரிக்கு இந்த படத்தில் பளபளக்கும் கண்ணாடி, ப்ளீச் போட்ட முடி, ஜீன்ஸ், டீஷர்ட் என மாடர்ன் இளைஞனாக அலைய விட்டிருக்கிறார்கள். இவரும், சிவாவின் தங்கையும் காதலிப்பதும், காதல் கூடுவதற்காக அவ்வப்போது நட்பு பற்றி சிவாவிடம் இவர் பேசும் வசனங்களும், சிவா அதற்கு கவுண்டர் வசனம் கொடுப்பதும் தியேட்டரில் விசில் பறக்கிறது.

படத்தின் கிளைமாக்சில் மாப்பிள்ளை கோலத்தில் என்ட்ரி ஆகிறார் சந்தானம். வழக்கம்போல் தன்னுடைய பஞ்ச் வசனங்களால் கடைசி 5 நிமிடங்களை மேலும் கலகலப்பூட்டியிருக்கிறார்.

படம் ஆரம்பம் முதல் கடைசி வரை காமெடியில் களைகட்டுகிறது. தன்னுடைய வசனங்களால் படம் முழுவதும் ரசிகர்களை சிரிக்க வைப்பதில் பெரும் வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர் பத்ரி. மிகப்பெரிய இயக்குனர்களின் படங்களை ரீமேக் செய்யும்போது, அந்த படத்தின் இயல்புக்கும், இயக்குனரின் புகழுக்கும் சிறிதும் களங்கம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் ரொம்பவும் கவனம் செலுத்தியிருக்கிறார் இயக்குனர். இவருடைய வசனங்கள்தான் படத்திற்கு மிகப்பெரிய பலமே. 

முதன்முதலாக எம்.எஸ்.விஸ்வநாதனும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்கள். ‘தில்லு முல்லு’ பாடலுக்கு இருவரும் இணைந்து திரையில் தோன்றி நடனமும் ஆடியிருக்கிறார்கள். இவர்களுடைய இசையில் ’ராகங்கள் பதினாறு உருவான வரலாறு’ பாடல் கார்த்திக் குரலில் இனிமையாக ஒலிக்கிறது. மற்ற பாடல்கள் சுமார் ரகம்தான். பின்னணி இசையிலும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.

லட்சுமணன் ஒளிப்பதிவில் பாடல் காட்சிகள் கண்களுக்கு இதமாய் காட்சியளிக்கின்றன. ப்ரவின், ஸ்ரீகாந்த் இருவருடைய எடிட்டிங் காட்சிகளின் கோர்வைக்கு உறுதுணையாய் இருக்கின்றன.

மொத்தத்தில் ‘தில்லு முல்லு’ சிரிப்பு வெடி...

தீயா வேலை செய்யணும் குமாரு.....

நடிகர் : சித்தார்த்
நடிகை :ஹன்சிகா மொத்வானி
இயக்குனர் :சுந்தர் சி.
இசை :சத்யா
ஓளிப்பதிவு :கோபி அமர்நாத்


பாரம்பரியமாக காதல் திருமணம் செய்து வந்த குடும்பத்தைச் சேர்ந்தவர் சித்தார்த். ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரியும் இவரால் மட்டும் காதலில் வெற்றி காண முடியவில்லை.

இவருக்கு காதல் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று துடிக்கும் இவரது அக்காக்கள் காதல் அனுபவத்தைப் பற்றி விளக்குகிறார்கள். மறுநாள் வேலைக்குப் போகும் சித்தார்த் அங்கு புதிதாக இவரது கம்பெனியில் வேலைக்கு சேரும் ஹன்சிகாவை கண்டதும் காதல் வயப்படுகிறார்.

அதே நிறுவனத்தில் பணிபுரியும் கணேஷ், ஹன்சிகாவுடன் நெருங்கி பழகுகிறார். இதைக்கண்ட சித்தார்த், எப்படியாவது ஹன்சிகா தன்னை காதலிக்க வேண்டும் என்று தனது அக்கா கணவரிடம் ஆலோசனைக் கேட்க, அதற்கு அவர் சந்தானத்தின் முகவரியைக் கொடுத்து ஹன்சிகாவை அடைவதற்காக தேவையான அனைத்து உதவிகளை செய்வார் என்று அனுப்பி வைக்கிறார்.

சந்தானத்தை சந்திக்கும் சித்தார்த், தனது நிலைமையை சொல்லி புலம்புகிறார். இதற்கு சந்தானம் பணம் வாங்கிக் கொண்டு ஆலோசனை வழங்குகிறார். இதிலிருந்து இவர்கள் இருவரும் செய்யும் கலாட்டாக்களில் திரையரங்கு சிரிப்பொலியில் அதிர்கிறது.

ஒரு கட்டத்தில் சித்தார்த்துக்கு சந்தானம் கொடுக்கும் ஐடியா, கணேஷ்- ஹன்சிகா இருவரும் காதலிப்பதற்கு காரணமாகிறது. இதனால் விரக்தியடைந்த சித்தார்த் தற்கொலை முயற்சிக்குச் செல்கிறார். மீண்டும் சந்தானம் அறிவுரை வழங்கவே கணேஷ் ஹன்சிகா காதல் முறிகிறது.

இந்த சூழலில் சந்தானத்தின் தந்திரமான ஆலோசனையால் ஹன்சிகா சித்தார்த் ஒருவரையொருவர் காதலிக்கின்றனர். இருவரையும் சந்தானம் ஒன்றாக சேர்த்து பார்த்தவுடன் மனமுடைந்து காதலை பிரிக்க திட்டமிடுகிறார்.

இருவரையும் சந்தானம் ஏன் பிரிக்க நினைக்கிறார்? இவர் சதியில் இருந்து சித்தார்த்-ஹன்சிகா காதல் மீண்டதா? என்பது மீதிக்கதை.

கதாநாயகன் சித்தார்த், முதலில் சாதுவாக தோன்றி, பின்னர் சந்தானத்துடன் இணைந்தவுடன் பாவப்பட்ட முகத்துடன் அடிக்கும் லூட்டிகள் தியேட்டரில் சிரிப்பலைகளை ஏற்படுத்துகிறது.

ஹன்சிகா உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகவும் சிக்கென்றும் தோன்றுகிறார். கணேஷின் காதலை ஏற்றுக்கொண்டு பிறகு அதை பிரேக்-அப் செய்வது போன்ற காட்சிகள் சிறப்பு. அவரது கன்னக்குழியில் ரசிகர்களை விழச்செய்திருக்கிறார்.

மோக்கியாவாக வரும் சந்தானம் தான் கூறும் ஒவ்வொரு கருத்துக்களையும் லோக்கல் ஏரியா லாங்குவேஜை சொல்லி விளக்குவது திரையரங்கை அதிர வைக்கிறது. ''நாகூர் பிரியாணி உளுந்தூர்பேட்டையில் உள்ள நாய்க்குதான் கிடைக்கும் என்று இருந்தால் அதை யாராலும் தடுக்க முடியாது'' என்பது போன்ற ஆழ்ந்த கருத்துக்களை உள்ளடக்கிய வசனங்கள் எண்ணில் அடங்காதவை. எண்ணத்தை விட்டு நீங்காதவை.

ஹன்சிகாவை காதலிப்பவராக வரும் கணேஷ் வெங்கட்ராமன் மற்றும் மொட்டை பாஸ்கி, எப்.எம். பாலாஜி, விச்சு, சித்ராலட்சுமணன், டெல்லி கணேஷ், ஸ்ரீரஞ்சனி உள்பட அனைவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை செம்மையாக செய்திருக்கிறார்கள்.

'கலகலப்பு' காமெடி படத்தைத் தொடர்ந்து சுந்தர்.சி கதை எழுதி இயக்கியிருக்கும் 'தீயா வேலை செய்யணும் குமாரு' படம் மூலம் தீப்பொறி கிளம்ப மற்றும் ஒரு நகைச்சுவை வெற்றிப்படத்தை தந்திருக்கிறார். படம் முழுக்க சந்தானத்தை பயன்படுத்தி திறன்பட காட்சிகளை அமைத்து படத்தில் தொய்வில்லாமல் கொண்டு சென்றிருக்கிறார். இதற்காக இவருக்கு ஒரு சபாஷ் போடலாம்!.

சத்யாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். கோபிஅமர்நாத்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் கண்களுக்கு குளிர்ச்சி.

'தீயா வேலை செய்யணும் குமாரு' மொத்தத்தில் சிரிப்பொலி.

எனது இந்தி படத்திற்கு சொந்த குரலில் டப்பிங் பேசினேன்: தனுஷ்

தமிழில் பல்வேறு வெற்றிப் படங்களில் நடித்துள்ள நடிகர் தனுஷ், முதன் முறையாக இந்தியில் ஆனந்த் என்பவரின் இயக்கத்தில் 'ராஞ்ஜனா' என்ற படத்தில் நடித்துள்ளார்.

இந்தப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இது தமிழில் 'அம்பிகாபதி' என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. தமிழ் பதிப்பின் உரிமையை அபிராமி ராமநாதன் வாங்கியுள்ளார். இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
எனது இந்தி படத்திற்கு சொந்த குரலில் டப்பிங் பேசினேன்: தனுஷ்
இந்த விழாவில் தனுஷ் பேசியதாவது:-

ஆடுகளம் படத்தைப் பார்த்த இயக்குனர் ஆனந்த், என்னை இந்தியில் நடிக்க அழைப்பு விடுத்தார். மொழிப்பிரச்சினை காரணமாக முதலில் படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்தேன். இருந்தாலும், தொடர்ந்து அவர் வற்புறுத்தியதால் நடிக்க ஒப்புக்கொண்டேன்.

இந்திப்பட உலகில் எனக்கு மரியாதை இருக்குமா என்ற அச்சம் முதலில் இருந்தது. ஆனால் மிகவும் மரியாதையுடன் என்னை நடத்தினார்கள். இந்த படத்திற்கு நானே இந்தியில் டப்பிங் பேசியிருக்கிறேன். படம் நன்றாக வந்திருக்கிறது. இது ஒரு வித்தியாசமான காதல் கதை.

இவ்வாறு அவர் கூறினார்.

Saturday, June 15, 2013

இயக்குனர் மணிவண்ணன் காலமானார்..

பிரபல இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 59. தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில், 50 படங்களுக்கு டைரக்டராகவும், சுமார் 400 படங்களில் குணச்சித்திர நடிகராகவும் நடித்துள்ள மணிவண்ணன், சென்னை நெசப்பாக்கத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் இன்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட அவரது இல்லத்திலேயே உயிர் பிரிந்தது. 

கோவை மாவட்டம் சூலூரில் 1954-ம் ஆண்டு ஜூலை மாதம் 31ம் தேதி பிறந்தவர் மணிவண்ணன். சினிமா மீதுள்ள ஆர்வத்தால் சினிமா துறைக்கு வந்தார். ஆரம்பத்தில் சின்ன வேடங்களில் நடித்தவர், பின்பு பாரதிராஜாவிடம் உதவியாளராக சேர்ந்தார். பாரதிராஜாவின் நிழல்கள், டிக் டிக் டிக், சிவப்பு ரோஜாக்கள் உள்ளிட்ட பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார். பின்னர் கோபுரங்கள் சாய்வதில்லை படத்தின் மூலம் இயக்குனராக அவதரித்தார். தொடர்ந்து இளமை காலங்கள், இங்கேயும் ஒரு கங்கை, நூறாவது நாள், பாலைவன ரோஜாக்கள், முதல் வசந்தம், ஜல்லிக்கட்டு, சின்ன தம்பி பெரிய தம்பி, வாழ்க்கை சக்கரம், மூன்றாவது கண், தெற்கு தெரு மச்சான், அமைதிப்படை உள்ளிட்ட 50 படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக சமீபத்தில் நாகராஜ சோழன் எம்.ஏ., எம்.எல்.ஏ., என்ற படத்தை இயக்கினார். 

இயக்குனராக மட்டுமல்லாமல் காமெடி, வில்லன், அப்பா கேரக்டர் உள்ளிட்ட பல்வேறு குணச்சித்திர வேடங்களை ஏற்று நடித்துள்ளார். ரஜினி, கமல், விஜயகாந்த், அஜீத், விஜய், உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் பலருடன் சுமார் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 

சினிமா மட்டுமல்லாது அரசியல் மற்றும் சமூகத்திலும் அதிக ஈடுபாடு கொண்டவர். ஆரம்பத்தில் மதிமுக கட்சியில் இருந்தவர் பின்பு டைரக்டர் சீமானின் நாம் தமிழர் கட்சியில் சேர்ந்தார். தொடர்ந்து இலங்கை தமிழர்களுக்கு ஆதரவு குரல் கொடுத்து வந்தார். 

இந்நிலையில், சென்னை நெசப்பாக்கத்தில் வசித்து வந்த மணிவண்ணனுக்கு இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் முன்பாகவே அவரது இல்லத்திலேயே அவரது உயிர் பிரிந்தது. மணிவண்ணனுக்கு ஜோதி என்ற மகளும், ரகு என்ற மகனும் உள்ளனர். 

மறைந்த மணிவண்ணனின் உடல் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மணிவண்ணனின் மறைவுக்கு திரைநட்சத்திங்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.